உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் ஜெப் பெசாஸ்!

976
976

ஒவ்வொரு ஆண்டும், உலகின் செல்வந்தர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,அமசோன் நிறுவர் ஜெப் பெசாஸ் முதலிடத்தில் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டொலர் எனவும், இவருக்கு அடுத்த இடத்தில் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உள்ளதாகவும், அவரது சொத்து மதிப்பு 151 பில்லியன் அமெரிக்க டொலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட செல்வந்தர்களின் பட்டியலில் எலான்மஸ்க் 31 ஆவது இடத்தில் இருந்தார். அவர் தற்போது 28 இடங்கள் முன்னேறியுள்ளார். மூன்றாவது இடத்தில் எல்.வி.எம்.எச். தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னோல்ட் 150 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.

அவரை தொடர்ந்து நான்காவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸும், ஐந்தாவது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்கும் உள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தடுத்த இடத்தில் வாரன் பபெட் மற்றும் லாரி எலிசன், லாரி பேஜ், செர்ஸி பிரின் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் உள்ளனர்.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவில் முதல் 10 இடங்களில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 6 இலட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

சுமார் 3 இலட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அதானி கிரீன், அதானி என்டர்பிரைசஸ் ஆகிய அவரது நிறுவனங்களின் பங்குகள் ரொக்கெட் வேகத்தில் உயர்ந்ததால், அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் 3 ஆம் இடத்திலும், அவன்யூ சூப்பர்மார்க்கெட் அதிபர் ராதாகிஷண் தமானி ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 4 ஆம் இடத்திலும் உள்ளனர்.

கோடக் மஹிந்திரா வங்கி தலைவர் உதய் கோடக் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 5 ஆம் இடத்திலும் உள்ளனர்.

தொடர்ந்து லட்சுமி மிட்டல், குமார் பிர்லா, சைரஸ் பூனவல்லா, திலீப் ஷாங்க்வி, சுனில் மிட்டல் ரூ குடும்பம் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

கடந்த ஆண்டு 102 ஆக இருந்த மொத்த இந்திய கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 140 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக 596 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

முதல் பத்து இந்திய கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டு இந்தியர்கள் சுகாதாரத் துறையில் செய்த முதலீடுகள் காரணமாக சொத்து மதிப்பு உயந்துள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் சைரஸ் பூனவல்லா மற்றும் சன் பார்மா சூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் திலீப் ஷாங்க்வி ஆகியோர் அவர்களாவார்கள். கடந்த ஆண்டு போர்ப்ஸ் தகவலின் படி 12 வது இடத்தில் இருந்த பார்மா அதிபர் திலீப் ஷாங்க்வி இந்த ஆண்டு முதல் 10 இடங்களுக்குள் மீண்டும் வந்துள்ளார்.