ஈரானின் அணுசக்தி தளம் மீது தாக்குதல்

X0blNMdP
X0blNMdP

ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு சம்பவம் “அணுசக்தி பயங்கரவாதத்தின்” செயலால் ஏற்பட்டது என்று நாட்டின் அணுசக்தித் தலைவர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார்.

இதனுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையை தெஹ்ரான் கொண்டுள்ளது.

நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டல் நிலையத்திற்கு எதிரான செயல், அணுசக்தித் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைத் தடுப்பதில் நாட்டின் தொழில்துறை மற்றும் அரசியல் முன்னேற்றங்களின் எதிரிகளின் தோல்வியைக் காட்டுகிறது என்றும் ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் அலி அக்பர் சலேஹி கூறினார்.

இந்த சம்பவத்தை அணுசக்தி ஒப்பந்தத்துடன் நேரடியாக இணைத்த சலேஹி, அமெரிக்க பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை எதிர்ப்பவர்களால் இது செய்யப்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேலின் கான் பொது வானொலி, உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் அந்த இடத்தில் சைபர் தாக்குதலை நடத்தியதாகக் கூறியது.

எனினும் இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் உத்தியோகபூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஈரானின் இஸ்ஃபாஹான் மாகாணத்தின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.‌ இந்த விபத்து காரணமாக ஆலையின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்தது. மேலும் இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் விநியோகம் தடைபட்டது.‌

எனினும் அதிர்ஷ்டவசமாக இதனால் எவரும் உயிரிழக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

மத்திய மாகாணமான இஸ்ஃபாஹானின் பாலைவனத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் மையப் பகுதியாகும். இது சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வாளர்களால் கண்காணிக்கப்படுகிறது.

முன்னாதாக ஈரான் தனக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களை உருவாக்க முற்படுவதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல், இந்த சம்பவம் குறித்து உத்தியோகபூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.