கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் சாட் நாட்டு ஜனாதிபதி பலி

thumb large Idriss D by I
thumb large Idriss D by I

சாட் நாட்டில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த சண்டையில் அந்நாட்டு ஜனாதிபதி நேற்று கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்ரிஸ் டெபி இட்னோ (68) ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாட் நாட்டில் 30 ஆண்டுக் காலமாக ஜனாதிபதி பதவி வகித்து வந்தவர். இவர் அங்கு கிளர்ச்சியாளர்களுடன் நடந்த சண்டையில் போர்க்களத்தில் நேற்று கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 11 ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்த சில மணி நேரத்தில், இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த 6 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக தொடர வேண்டியவர், போர்க்களத்தில் கொல்லப்பட்டிருப்பது அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு அடுத்த 18 மாதங்களுக்கு அவரது மகன் மகாமத் இத்ரிஸ் டெபி இட்னோ (38) தலைமையிலான இடைக்கால கவுன்சில் நாட்டை நிர்வகிக்கும் என்று இராணுவம் அறிவித்துள்ளது.

மேலும், அங்கு இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இராணுவ அதிகாரியாக இருந்து நாட்டின் அதிபராக உயர்ந்தவர் இத்ரிஸ் டெபி இட்னோ என்பது குறிப்பிடத்தக்கது.