அப்பல்லோ 11 விண்வெளி வீரரான மைக்கேல் கொலின்ஸ் மரணம்!

E0E7iIDXsAMogIr
E0E7iIDXsAMogIr

சந்திரனில் தரையிறங்கிய அப்பல்லோ 11 பயணத்தின் உறுப்பினரான விண்வெளி வீரர் மைக்கேல் கொலின்ஸ் 90 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயுடன் போராடி வந்த கொலின்ஸ் புதன்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“புற்றுநோயுடன் ஒரு வீரம் நிறைந்த போருக்குப் பிறகு, எங்கள் அன்புக்குரிய தந்தையும் தாத்தாவும் இன்று காலமானார்கள் என்பதை தெரிவிப்பதில் நாங்கள் வருத்தப்படுகிறோம்” என்று கொலின்ஸின் குடும்பத்தினர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

1969 ஜூலை 16 ஆம் திகதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலிருந்து நிலவுக்குப் புறப்பட்டது அப்போலோ 11 விண்கலம், ஜூலை 20 ஆம் திகதி நிலவில் தரையிறங்கியது.

இதன்போது அதில் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் கால்பதிக்க, கொலின்ஸ் சந்திர மேற்பரப்பில் இருந்து சுமார் 60 மைல் தூரத்தில் விண்கலம் மூலம் சுற்றி வந்தார்.

ஆகவே ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோருடன் சேர்ந்து அவர் செய்த சாதனைகள் வரலாற்றில் மிகவும் பிரபலமான விண்வெளி பயணங்களில் ஒன்றாக உள்ளது.

எனினும் கொலின்ஸ் ஒருபோதும் சந்திரனில் காலடி எடுத்து வைக்கவில்லை.

கொலின்ஸ் 1930 இல் இத்தாலியில் பிறந்தார். வெஸ்ட் பாயிண்டில் உள்ள அமெரிக்க இராணுவ அகடமியில் பட்டம் பெற்ற பிறகு, 1958 முதல் 1963 வரை கலிபோர்னியாவின் எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் போர் விமானி மற்றும் சோதனை பைலட்டாகவும் அவர் பணியாற்றினார்.

1963 ஆம் ஆண்டில் நாசாவால் விண்வெளி வீரராக ஆக கொலின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொலின்ஸ் 1970 இல் நாசாவிலிருந்து ஓய்வு பெற்றார்.

விண்வெளி நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவர் தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும், ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் துணை செயலாளராகவும் பணியாற்றினார்.