அமெரிக்காவில் ஆட்கடத்தல் படகு விபத்தில் மூவர் உயிரிழப்பு!

download 1
download 1

அமெரிக்காவின் சான் டியாகோ கடற்கரையில் சட்டவிரோதமாக ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட படகொன்று பாறை மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9:56 மணியளவில் பாயிண்ட் லோமா அருகே குறித்த படகு பாறை மீது மோதுண்டே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் அதில் பயணித்த 30 பேர் நீரில் மூழ்கியதாக சான் டியாகோ நகர அதிகாரிகள் கூறியுள்ளதுடன், மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக படகின் கேப்டன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக நபர்களை அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற படகொன்றே, குறித்த பகுதியில் நிலவிய பாதகமான வானிலை காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக கூறப்படுகிறது.