தெற்காசியர்களுக்கு வைரசின் 2 ஆவது அலையில் அதிக பாதிப்பு

Map of South Asian countries
Map of South Asian countries

இங்கிலாந்தில் கொரோனா வைரசின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக லண்டன் ஸ்கூல் ஒப் ஹைஜீன் மற்றும் டிராபிக்கல் மெடிசன் ஆய்வுகளை மேற்கொண்டது.

மொத்தம் 1.7 கோடி பேரிடம் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அதன் முடிவுகள் வெளிவந்துள்ளன. அனைத்து இனத்தவர்களிடமும் இருந்து சுகாதார நிலைமைகள், சமூக காரணிகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இதில், இங்கிலாந்தில் ஏற்பட்ட கொரோனா முதல் அலையில் அங்கு வசிக்கும் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஆனால் முதல் அலையை விட கொரோனாவின் 2 வது அலையில் தெற்காசியாவை சேர்ந்தவர்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதிலும், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதிலும் மற்றும் உயிரிழப்பிலும் தெற்காசியாவை சேர்ந்தவர்களே அதிகளவில் இருந்தனர்.

கடந்த ஆண்டு கொரோனா வைரசின் முதல் அலையுடன் ஒப்பிடும் போதும், இங்கிலாந்து நாட்டவர்களுடன் ஒப்பிடும் போதும் அனைத்து சிறுபான்மையின சமூகங்களுக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் தொற்று நோய்க்கான இரத்த அழுத்தம், சுகாதார காரணிகள் உள்ளிட்டவை தெற்காசியாவை சேர்ந்தவர்களுக்கு அதிக ஆபத்தை கொண்டு வந்திருந்தன.

தெற்காசியாவை சேர்ந்தவர்களில் மட்டுமே கொரோனா வைரசின் இறப்புக்கான ஏற்றத்தாழ்வுக்கு வீட்டின் அளவு ஒரு முக்கிய காரணியாக இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.