தென்கொரியாவில் பஸ் மீது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் பலி

210609214950 01 south korea building collapse 9 deaths exlarge 169
210609214950 01 south korea building collapse 9 deaths exlarge 169

தென் கொரியாவில் நேற்று புதன்கிழமை கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்த போது ஐந்து மாடி கட்டிடம் பஸ் மீது இடிந்து விழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நேரம் பரபரப்பான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் தலைநகர் சியோலுக்கு தென்மேற்கே சுமார் 270 கிலோமீட்டர் (168 மைல்) தொலைவில் உள்ள குவாங்ஜூவில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டது.

25 பேர் காயமடைந்தனர். அதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

கட்டடம் இடிக்கும் தொழிலாளர்கள் 16 பேருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் சுமார் 190 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டனர்.

கட்டிடம் சரிந்து விழுந்தமைக்கான காரணம் அறியப்படாத நிலையில், அந்நாட்டு நிலம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் விசாரணையை முன்னெடுத்துள்ளது.

உட்கட்டமைப்பின் மோசமான பாதுகாப்பினால் தென் கொரியா போராடி வருகிறது.

1995 ஆம் ஆண்டில் கடை தொகுதி இடிந்து விழுந்ததில் 500 க்கும் மேற்பட்டோரும்,1994 ல் ஒரு பாலம் இடிந்து 49 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.