மியன்மார் பணிப்பெண்ணை கொலைசெய்த சிங்கப்பூர் பெண்ணுக்கு 30 வருட சிறை

ak gm2 2904
ak gm2 2904

மியன்மார் பணிப்பெண் ஒருவரை பட்டினியிட்டு சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில், குற்றவாளியாக காணப்பட்ட சிங்கப்பூர் பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பியாங் நை டன் என்ற 24 வயதுடைய குறித்த பணிப்பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

காயங்களினால் அவர் மரணித்தபோது 24 கிலோகிராம் நிறையுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட காயத்திரி முருகையன் (40) என்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கே 30 வருட சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளியான பெண், தனது வீட்டில் பணிபுரிந்துவந்த மேற்படி பெண்ணுக்கு பழைய உணவுகளை வழங்கியும், சில வேளைகளில் உணவு வழங்காமலும் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால் பியாங் நை டன் 14 மாதங்களில் (மொத்த உடல் எடையில் 38 சதவீதம்) 15 கிலோ எடையை இழந்துள்ளதாக நீதிமன்றில் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி தொடர்ச்சியாக பல மணித்தியாலங்கள் பியாங் தாக்கப்பட்டமையினால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.