ஜம்மு – காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

4 1
4 1

ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களின் கூட்டம் ஒன்றை நாளை 24 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்தக் கூட்டத்திற்கான அழைப்புகளை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கு அனுப்பி உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் மூவர் உட்பட 14 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் குறித்த கூட்டமானது, டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் குறித்த தினமன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஜம்மு – காஷ்மீர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு முறைப்படி அழைப்பு வந்துள்ளது என்ற செய்தியை குப்கார் பிரகடன அமைப்பின் பேச்சாளரும், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான எம்.ஒய். தாரிகாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அழைப்பு வந்துள்ள செய்தியை தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஷேக் அப்துல்லாவும் உறுதி செய்தார்.

முறைப்படி அழைப்பு வந்துள்ள சூழ்நிலையில் குப்கார் பிரகடன அமைப்பைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், மத்திய அரசு கூட்டி உள்ள கூட்டத்தை குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுப்போம் என்று தாரிகாமியும் ஷேக் அப்துல்லாவும் தெரிவித்தனர்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவரான ஷேக் அப்துல்லா ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் ஆவார். ஜம்மு – காஷ்மீர் பற்றி பேசுவதற்காக அரசியல் தலைவர்களின் கூட்டம் ஒன்றை நடத்துவது என்று மத்திய அரசு முடிவு செய்ததும் இது தொடர்பாக ஜம்மு – காஷ்மீர் அரசியல் தலைவர்களின் கருத்தை அறிய மூன்றாவது அரசியல் பிரமுகர்கள் வழியாக ஷேக் அப்துல்லாவை தான் முதன்முதலில் தொடர்பு கொண்டமை விசேட அம்சமாகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஒகஸ்ட் 5ஆம் திகதி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்ட சரத்து 370ஐ மத்திய அரசு இரத்து செய்தது. அதற்குப் பின்னர் நடைபெறவிருக்கும் முதலாவதுஅரசியல் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.