காபூல் வெடிப்புச்சம்பவங்களுக்கு ஐ.எஸ் உரிமைகோரியது: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு

23 1469279577 blast fire33600 jpg
23 1469279577 blast fire33600 jpg

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்தின் அபேய் நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற இரு வெடிப்புச்சம்பவங்களில் அமெரிக்க துருப்பினர் உட்பட 13 பேர் உட்பட 73 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, சம்பவத்தில் 140 பேர் காயமடைந்துள்ள அதேவேளை, இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமைகோரியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் அமைந்துள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் இன்றிரவு இரண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

முதலாவது வெடிப்பு சம்பவம் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள விடுதியொன்றுக்கு வெளியில் இடம்பெற்றிருந்த நிலையில், இரண்டாவது வெடிப்பு சம்பவம் மேற்படி விடுதியை அண்மித்ததாக, விமான நிலையத்தின் அபேய் நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, காபூல் விமான நிலையத்தினை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய புலனாய்வு பிரிவினர் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.