இந்திய முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் குடியுரிமை பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும் – வைகோ

2559056c ca47277c vaiko 850x460 acf cropped
2559056c ca47277c vaiko 850x460 acf cropped

இந்தியாவில் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களின் குடியுரிமை பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ எனப்படும் வை.கோபாலசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக, பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமைக்கு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

317 கோடி ரூபாவில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

7,469 வீடுகள், முகாம்களில் மின், குடிநீர் வசதிகள், கல்வி மற்றும் பல்வேறு நலத்திட்டப்பணிகள், இந்த நிதி ஆண்டில் மேற்கொள்ளப்படவிருப்பது மகிழ்ச்சியாகும்.

அதேபோல, அவர்களது குடி உரிமை குறித்தும் ஆய்வு செய்து, அரசாங்கத்திற்கு அறிக்கை அளிப்பதற்காக ஒரு குழு அமைப்பதாகவும் முதல் அமைச்சர் அறிவித்து இருக்கின்றார்.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக, தமிழ்நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோரை, பிரித்தானியர்களால் அழைத்து செல்லப்பட்டனர்.

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர், இலங்கையில் மலையக பகுதிகளில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர்களில் 10 இலட்சம் பேருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது.

அதை எதிர்த்து, மலையகத் தமிழர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.

இந்தப் பிரச்சினை, 15 ஆண்டுகளாக நீடித்தது.

1964 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி, அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும், இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்தானது.

5 இலட்சத்து 25 ஆயிரம் பேரை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்வது எனவும் எஞ்சியவர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்குவது எனவும் அந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய, இலங்கையில் இருந்து இந்தியாவின் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.

தமிழக அரசு மறுவாழ்வுத் துறையின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் 1984 ஆம் ஆண்டு வரை, 4 இலட்சத்து 71 ஆயிரம் பேர், இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர்.

உடன் படிக்கையின்படி, இந்தியக் குடி உரிமை பெறத் தகுதியுள்ள 1 இலட்சத்து 30 ஆயிரம் பேர் உள்ளனர்.

1983 ஆம் ஆண்டு, இலங்கையில் ஏற்பட்ட யூலை கலவரத்திற்கு பின்னர் படகுகளில் இந்தியாவுக்கு பிரவேசித்த மலையகத் தமிழர்களும் தமிழ்நாட்டில் 100 முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

தற்போது 45 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இவ்வாறு முகாம்களில் உள்ளதாக வை கோபாலசாமி தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை உடன்படிக்கைகளின்படி, இந்தியாவுக்குத் திரும்ப வந்து, நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில், தேயிலைத்தோட்டங்களில் குடி அமர்த்தப்பட்டவர்களுக்கு அப்போது அரசுகள் வழங்கிய உறுதிமொழிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழக அரசு, கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும் என வை.கோபாலசாமி தெரிவித்துள்ளார்.