‘அழுவதற்கான தனி அறை’ திட்டத்தை ஆரம்பித்த ஸ்பெய்ன்!

202110181512321084 Tamil News Spains Crying Room seeks to banish mental health taboo SECVPF
202110181512321084 Tamil News Spains Crying Room seeks to banish mental health taboo SECVPF

ஸ்பெய்ன் நாட்டில் ‘அழுவதற்காகத் தனி அறை’ என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில், மன அழுத்தம் காரணமாக, தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அரசாங்கமும் தன்னார்வ அமைப்பொன்றும், கடுமையான முயற்சிகளை எடுத்துள்ளன.

ஸ்பெயின் அரசாங்கம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம், 3,671 பேர் தற்கொலை காரணமாக உயிரிழந்துள்ளனர்.

பத்து இளைஞர்களில் ஒருவர் உளநலப் பிரச்சினையுடன் இருப்பதாகவும், மொத்த சனத்தொகையில் 5.8% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அந்நாட்டின்  தலைநகர் மெட்ரிட்டில் அழுவதற்காகத் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.

மனநல பிரச்சினைகளால் அதிகரிக்கும் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் இந்தப் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கவலைகள் தீரும் வகையில் மனம் திறந்து அழுவதற்காக, இந்த அழுகை அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த அறையில் உளவியல் மருத்துவர் உட்பட மனச்சோர்வடையும்போது அழைக்கக்கூடிய நபர்களின் பெயர்களுடன் தொலைபேசிகள் உள்ளன.

அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியும் ஆறுதல் பெறும் வகையில் இந்த அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்காக, 116 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் 24 மணித்தியாலங்களும் தற்கொலை தடுப்பு உதவி சேவை மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயின் அரசின் இந்தப் புதிய முயற்சிக்கு அந்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள்,  சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.