மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை!

1527141219 murder L
1527141219 murder L

பிரித்தானியாவில் மனைவியைக் குத்திக் கொலை செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த அனில் கில் (47) மற்றும் அவரது மனைவி ரஞ்சித் கில் (43) ஆகியோர் பிரித்தானியாவின் மில்டன் கினிஸ் நகரில் வசித்து வந்துள்ளதுடன், இருவருக்கும் மதுபானம் மற்றும் போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும் ஒன்றாக போதைப்பொருள் பயன்படுத்தும்போது, போதைப் பொருள் வழங்கும் ஆண் நபருக்கும், தனக்கும் உள்ள தொடர்பு குறித்து ரஞ்சித் கில், அவரது கணவரிடம் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அனில் கில், கூரிய ஆயுதத்தைப் பயன்படுத்தி அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலத்தைப் போர்வையில் சுற்றி அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் அவர் வீசி சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அயலவர்கள் அளித்த முறைப்பாடுக்கமைய, அனில் கில்லை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலதிக விசாரணையில் மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்ததுடன், அதில் அனில் கில் குற்றவாளி என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதற்கமைய, குற்றவாளியான அனில் கில் குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.