ஜேர்மனியில் 2ஆம் உலகப்போர் குண்டு வெடித்ததால் பரபரப்பு- 4 பேர் படுகாயம்!

germany 22022021 400 1
germany 22022021 400 1

ஜேர்மனியில் தொடருந்து கட்டுமான தளத்தில், 76 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்ததில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் உலகப்போர் 1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

வெடிக்காத போர்க்கால குண்டுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகளால் எறியப்பட்ட குண்டுகள், போர் முடிந்து 76 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஜேர்மனியில் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன.

அதன் காரணமாக அந்தப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு, பெரும்பாலான குண்டுகள் வெடிக்காமல் நிபுணர்களால் செயலிழக்க செய்யப்படுகின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு, பிராங்பர்ட் நகரில் 1.4 டன் எடையுடைய ‘பிளாக் பஸ்டர்’ குண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது, 70 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், ஜேர்மனியில் முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர் பாலத்துக்கு அருகே தொடருந்து துறை கட்டுமான தளத்தில் கட்டுமானப்பணி இடம்பெற்று வருகிறது.

அந்தப்பகுதியில் நேற்று முன்தினம், இரண்டாம் உலகப்போர் குண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது.

பாலத்துக்கு அருகே சுரங்கப்பாதை பணியின்போது இந்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 4 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இவ்வாறு வெடித்த இரண்டாம் உலகப்போர் குண்டின் எடை சுமார் 250 கிலோ என பேவேரியா மாகாணத்தின் உள்துறை அமைச்சர் ஜோக்சிம் ஹெர்மான் தெரிவித்துள்ளார்.