ஜோ பைடனுக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் பேச்சுவார்த்தை!

np file 63244
np file 63244

உக்ரைன் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள தருணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம்(7) இணையத்தளத்தினூடாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

உக்ரேனுக்கு எதிராக பாரிய தாக்குதல் ஒன்றை ரஷ்யா மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதற்கான தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னதாக அமெரிக்க இராஜங்க செயலாளர் அந்தனி பிளிங்கன் தெரிவித்திருந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பான இறுதி தீர்மானத்தை விளாடிமீர் புட்டின் மேற்கொண்டுள்ளாரா? என்பது குறித்த விபரங்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனை மறுத்துள்ள ரஷ்யா, உக்ரைன் தமது படையணியினரை பலப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யா 94,000 துருப்பினர் உக்ரைனுடனான எல்லை பகுதிக்கு நகர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதவிர, இராணுவ கனரக வாகனங்கள் மற்றும் மின்னணு போர் முறைமை தொகுதிகளை அனுப்பியுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் பாரிய இராணுவ நடவடிக்கை அடுத்த வருடம் ஜனவரி இறுதியளிவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஒலிக்சி ரெஸ்நிக்கோவ் எச்சரித்துள்ளார்.