புருண்டி சிறைச்சாலை தீ விபத்தில் 38 கைதிகள் உடல் கருகி பலி!

swarajya 2019 12 7984437e d647 4d5c adc0 e33aad7f11e5 fire
swarajya 2019 12 7984437e d647 4d5c adc0 e33aad7f11e5 fire

புருண்டி நாட்டின் சிறையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஆபிரிக்க நாடான புருண்டியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சுமார் 400 கைதிகளை மட்டுமே வைக்கக்கூய வகையில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில் சுமார் 1,500 க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த பியர் நுகுருஞ்ஜிசாவின் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 100 க்கும் மேற்பட்டோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மேற்படி சிறைச்சாலையில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த சிறைக்காவலர்கள் முயன்றபோதிலும், முயற்சி பலனளிக்கவில்லை.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும் இந்த தீப்பரவலில் சிக்கி 38 கைதிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், மேலும் 69 கைதிகள் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 34 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீப்பரவல் மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாமென அந்நாட்டு காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.