21 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இந்தியாவுக்கு ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம்!

thumb jhonstan
thumb jhonstan

இஸ்ரேலின், இலாத் நகரில் நடைபெற்ற 70 ஆவது பிரபஞ்ச அழகி போட்டியில் (மிஸ் யுனிவர்ஸ்) இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் சந்து பிரபஞ்ச அழகியாக முடிசூடினார்.

இதனையடுத்த, பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை  அவர் தனதாக்கிக்கொண்டார்.

பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்ட ஹர்னாஸ் ஒரு மொடல் அழகி என்பதுடன், அவர் மிஸ் திவா போட்டியிலும் வெற்றிப் பெற்றுள்ளார்.

பிரபஞ்ச அழகிப் போட்டியில் 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டதுடன், அவர்கள் அனைவரையும் தோற்கடித்து பிரபஞ்ச அழகி கிரீடத்தை அணியும் வாய்ப்பு பஞ்சாப்பை சேர்ந்த ஹர்னாஸுக்கு கிடைத்துள்ளது.

இதில் பராகுவேயின் நாடியா ஃபெரீரா மற்றும் தென்னாபிரிக்காவின் லலேலா ஸ்வான் ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, ஹர்னாஸுக்கு முன்னர் நடிகை சுஷ்மிதா சென் மற்றும் லாரா தத்தா ஆகிய இந்தியர்கள் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளனர்.

1994 இல் சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகியாக தெரிவானதுடன், லாரா தத்தா 2000 ஆம் ஆண்டில் பிரபஞ்ச அழகியாக தெரிவானார்.

அதற்கமைய, 21 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவுக்கு பிரபஞ்ச அழகி பட்டம் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.