ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

b867242b 9e30c96d omicron 850x460 acf cropped
b867242b 9e30c96d omicron 850x460 acf cropped

பிரட்டனில் ஒமிக்ரோன் வைரஸ் உக்கிரமாகி வருகிறது. இதுவரையில்லாத வகையில் நேற்று ஒரேநாளில் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திவிட்டுள்ளதுடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு 3-வது அலை வாட்டி எடுத்து வருகிறது.

அடுத்த சில நாட்களில் பாதிப்பு இன்னும் கடுமையாக அதிகரிக்கும் என்று பிரிட்டன் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

இதற்கு முன் கடந்த ஜனவரியில் அதிகபட்சமாக தினசரி 10 ஆயிரத்துக்கும் மேல்தான் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் 78 ஆயிரத்து 610 பேர் பாதிக்கப்பட்டது அதிகபட்சமாகும். பிரிட்டனில் 6.7 கோடி மக்கள் வசிக்கும் நிலையில் இதுவரை 1.10 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நேற்று அளித்த பேட்டியில், “ பிரிட்டனில் அதிக சக்தி வாய்ந்த, வேகமாகப் பரவக்கூடிய ஒமிக்ரோன் வைரஸால்தான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. அடுத்துவரும் நாட்களில் பாதிப்பின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும்” என எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே பிரிட்டனில் கொரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை எனக் கூறி 100 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு எதிராகக் கிளம்பியிருப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் சுகாதாரத்துறை அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்னி ஹாரிஸ் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து ஒமிக்ரோன் வைரஸ்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

அடுத்துவரும் நாட்களில் தற்போதுள்ள பாதிப்புகளைவிட இன்னும் மோசமாக அதிகரிக்கும். மற்ற உருமாறிய வைரஸ்களைவிட ஒமைக்ரானில் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. பிரிட்டனில் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக லண்டன், மான்செஸ்டர் நகரங்களில் ஒமைக்ரானில் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட இரு நாட்களில் இரு மடங்காக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்தார்