ஆங்கில மொழி பேசக்கூடிய மெமே பிராந்தியத்தில், கும்பா நகரில் உள்ள படசாலைக்குள் இருந்து பிரிவினைவாதிகளால் 24 குழந்தைகள் கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற இச்சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
குழந்தைகளை மீட்கச் சென்றுள்ள இந்நாட்டு இராணுவத்தினருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 2 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து 24 குழந்தைகளையும் ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. மீட்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கமரூனில் தேர்தல் நெருங்கி வருகிற வேளையில், வட மேற்கு மற்றும் தென்மேற்கு ஆங்கிலோபோன் பிராந்தியத்தில் ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஆபிரிக்க நாடான கமரூனில் 2017ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் நாட்டின் வட மேற்கு மற்றும் தென்மேற்கு ஆங்கிலோபோன் பிராந்தியத்தை தனி நாடாக்க ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.