பார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர்

thirumoorthi
thirumoorthi

திருமூர்த்தியின் (பார்வையற்றர்) கண்ணானே கண்னே பாடலைக் கேட்ட இசையமைப்பாளர் டி. இமான் பாராட்டு தெரிவித்ததுடன் அந்த இளைஞரை தனது அடுத்த படத்தில் பாட வைக்கப்போவதாக கூறியுள்ளார்.

இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிபட்டி கிராமத்தை சேர்ந்த திருமால் என்பவருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் திருமூர்த்தி. பிறவியிலேயே கண் பார்வை இல்லாத மாற்றுத் திறனாளியான இவரின் தாயார் கடந்த ஆண்டு சக்கரை வியாதியால் உயிரிழந்தார். பிறவியிலேயே பார்வை இல்லை என்றாலும் பிறவியிலேயே இசைத்திறன் கொண்ட குரலுடன் பிறந்தவர்தான் திருமூர்த்தி. தனது இனிமையான குரலால் லட்சக்கணக்கான இனையத்தள வாசிகளின் மனதில் குடிகொண்டுள்ளார் மாற்று திறனாளி இளைஞர் திரு மூர்த்தி.

திருமூர்த்திக்கு கண் பார்வை இல்லாததால் அவரை பெற்றோர்கள் பர்கூரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் 1ம் வகுப்பில் சேர்த்து பின்னர் மகனை தனியாக விட அஞ்சி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே வைத்துக்கொண்டனர். இந்த நிலையில் இயற்கையிலேயே நல்ல குரல் வளத்துடன் பிறந்ததால் திருமூர்த்தி அந்தக் கிராமத்தில் தனது பாடல்திறன் மூலம் மக்களின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வருகிறார். அங்கு உள்ள அனைத்து வீடுகளிலும் சாப்பிட்டு செல்ல பிள்ளையாக வளரும் 17 வயதே ஆன திருமூர்த்தி 200க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை சரளமாக பாடுவார்.

திருமூர்த்தி தனது சிறுவயதில் கொட்டங்குச்சி மூலம் இசை வாசித்துக்கொண்டே பாடத் துவங்கினார் பின்னர் வீட்டில் உள்ள பாத்திரங்கள், குடம் போன்ற பொருட்களில் இசையை வாசித்து அதற்கு ஏற்றாற் போல் பாடலை பாடி வந்தார். இவ்வாறு பாடி வரும் திருமூர்த்தி தற்பொழுது சொந்தமாகவே 10 பாடல்களை எழுதி பாடியுள்ளார்.

இவ்வாறு தனது குரல் வளத்தால் அனைவரையும் ஈர்க்கும் திருமூர்த்தி சில நாட்களுக்கு முன்பு அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடியுள்ளார். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர் அருண்குமார் என்பவர் தனது செல்போனில் பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த அஜித் ரசிகர் மதன் குமாருக்கு அனுப்பியுள்ளார்.

பெங்களூரில் பணி புரியும் மதன் குமார் அந்த பாடலை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதனை ஏராளமான அஜித் ரசிகர்கள் பல்வேறு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ பதிவு செய்த சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் பரவியது. அவ்வாறு சமூக வலைதளத்தில் டிரென்ட் ஆன இந்த வீடியோவைப் பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் திருமூர்த்தி தொடர்பு எண்ணை கேட்டிருந்தார். இதனை அடுத்து திருமூர்த்தியை செல்போனில் அழைத்து பேசிய அவருக்கு பாராட்டு தெரிவித்ததுடன் தனது இசையில் பாட வாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் உலக அளவில் டிரெண்ட் ஆன திருமூர்த்தி ஒரு வேலை உணவிற்கு சிரமம்படும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது திறமைக்கு வாய்ப்பு வழங்கி இவரது வாழ்க்கையை உயர்த்த திரை துறையினர் மட்டுமின்றி அரசும் முன் மர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.