பாகிஸ்தானில் நிலநடுக்கம்; 22 பேர் உயிரிழப்பு

pakistan
pakistan

பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதி, காஷ்மீர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் குறைந்தது 22 பேர் உயிரிழந்ததோடு, 700 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் நிலநடுக்கத்தினால் அதிர்ந்த கட்டடங்கள், வீடுகள் ஆகியவற்றிலிருந்து மக்கள் சாலைகளில் இறங்கி ஓடியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிர்புரின் புறநகரிலுள்ள சஹன்கிக்ரி கிராமத்திலிருந்த கிட்டத்தட்ட 400 வீடுகள் சேதமடைந்ததாகக் கிராமவாசிகள் தெரிவித்தனர். அதனையடுத்து, மிர்பூரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

காஷ்மீரின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விமான மற்றும் மருத்துவ ஆதரவுக் குழுக்களை ராணுவம் அனுப்பியிருப்பதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் புதுடெல்லி வரை உணரப்பட்டதாகக் கூறப்பட்டது. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நில அதிர்வால் பீதியடைந்த மக்கள் வீடுகளிலிருந்தும் அலுவலகங்களிலிருந்தும் வெளியேறினார்கள்.

“அதிர்வு உணரப்பட்டபோதிலும் எந்தவிதச் சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை,” என்று இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரின் பேரிடர் நிர்வாகத் துறையைச் சேர்ந்த அமீர் அலி தெரிவித்துள்ளார்.