உலகமே ஊரடங்கில் சீனாவில் மட்டும் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு நீக்கம்; நீடிக்கும் மர்மம்

8 k
8 k

கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக உலகின் பல நாடுகள் ஊரடங்கை செய்து கொண்டு பயணக்கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் சீனா மட்டும் இன்று நள்ளிரவு முதல் (மார்ச் 25 முதல்) பயணக்காட்டுபாடுகள் தளர்த்தப்படுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சீனாவின் வுகானில் திடீரென மர்ம காய்ச்சல் பரவி பலரும் உயிரிழக்க ஆரம்பித்தனர்.

இந்த வைரஸை ஆராய்ந்த சீன மருத்துவர்கள், இவை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக்கூடிய சார்ஸ் வகை வைரஸ் என்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சீனாவில் பல பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, குறிப்பாக ஹுபே மாகாணம் மற்றும் வுகான் நகரம் நாட்டின் பிற பகுதியில் இருந்து மொத்தமாக துண்டிக்கப்பட்டது.

எனினும் தூண்டிக்கப்படுவதற்கு முன்பே வுகானில் இருந்த வெளிநாட்டவர்கள் பலர் கொரோனா காய்ச்சலுக்கு பயந்து சொந்த நாட்டிற்கு சென்றனர்.

அப்படி சென்றவர்கள் , அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அடுத்தடுத்து சங்கிலி தொடர் போல் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கு பரவியது.

அதேநேரம் சீனாவில் ஜனவரி 23ம் திகதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த மக்கள் பலருக்கும் தொற்று நோய் வேகமாக பரவியது.

இதை தாமதமாக உணர்ந்த சீன அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. கிட்டத்தட்ட பல லட்சம் பேரை பரிசோதித்து தனிமைப்படுத்தியது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒரே மாதத்தில் 60 ஆயிரம் ஆகியது. அதன்பிறகு மார்ச் முதல் வாரத்தில் 80 ஆயிரத்தை கடந்தது. ஆனால் அதன்பிறகு கொரோனா பரவுவது சீனாவில் வேகமாக குறைந்தது. கடுமையாக பாதிக்கப்பட்ட வுகான் நகரில் சுமார் கடந்த இரு மாதத்தில் மட்டும் 3200 பேர் உயிரிழந்தனர்.

ஆனால் சீனாவைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் அண்மைக்காலமாக புதிதாக கொரோனா வைரஸ் பரவவில்லை. வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு வந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா இருந்தது.

அவர்களை தனிமைப்படுத்தி தற்போது சீனா சிகிச்சை அளித்து வருகிறது. உயிரிழப்புகளும் ஒற்றை இலக்கத்தில் குறைந்து வருகிறது. கடுமையான சோதனைகளை தொடர்ந்து செய்ததால் கொரானாவை முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளது சீனா.

இப்போது சீனா தான் உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் நோயை எப்படி தடுப்பது என்பது குறித்து பயிற்சிஅளித்து வருகிறது.

உலகே தற்போது கொரேனா வைரஸ் பீதியில் ஊரடங்கு செய்து எப்படி தடுப்பது என்று விழிபிதுங்கி வருகிறது. ஆனால் சீனாவில் இயல்பு நிலை முழுமையாக திரும்பி வருகிறது. இன்று நள்ளிரவு 12 மணி (மார்ச் 25 ) முதல் பயணக்கட்டுப்பாடுகள் இல்லை என்று அறிவித்துள்ளது.

இதன் மூலம் இரு மாதங்களுக்கு பிறகு மக்கள் நாட்டின் எந்த பகுதிக்கும் செல்ல முடியும். ஆனால் கொரோனா உருவான வுகான் நகரில் மட்டும் ஏப்ரல் 8ம் திகதி தான் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எப்படி சீனா கொரோனாவை குறைந்த உயிரிழப்புடன் தடுத்தது என்பது உலக நாடுகளை பொறுத்தவரை மர்மமாகவே இருக்கிறது.