கொரோனா வந்து கவனிப்பில்லாத முதியவர்கள் படுக்கையிலேயே மரணம்

93
93

கொரோனா வந்து கவனிப்பில்லாத முதியவர்கள் பலர் ஆதரவற்றோர் இல்லங்களில் படுக்கையிலேயே மரணமடைந்த முதியவர்களின் உடல்களை ஸ்பெயின் ராணுவம் மீட்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதித்த நாடுகளில் சீனாவுக்கு அடுத்து மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா உள்ளிட்டவை ஆகும்.

இதில் ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் அதிகளவு மரணங்கள் ஏற்படுகின்றன. ஸ்பெயினில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,182 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் பலியாகிவிட்டனர்.

இந்த நிலையில் தலைநகர் மேட்ரிட்டில் ஒரு முதியோர் இல்லம் இருக்கிறது. இந்த இல்லங்களில் ஏராளமானோர் தங்கியிருந்தனர்.

இந்த இடங்களில் கிருமிநாசினி மருந்துகளை தெளிக்கும் பணி ஸ்பெயின் நாட்டு ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது.

அப்போது அந்த இல்லத்தை சுற்றி மருந்து தெளித்தனர்.இதையடுத்து உள்ளே மருந்துத் தெளிக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அப்போது கொரோனா வந்த முதியவர்கள் பலர் பராமரிக்க யாரும் இன்றி அவதிப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாக கைவிடப்பட்ட முதியோர்கள் 12 பேர் படுக்கையிலேயே மரணமடைந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மர்கரடா ரோப்ஸ் ஒரு தனியார் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் முதியவர்களை இப்படி கைவிட்டோருக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ராணுவம் சில இடங்களில் சென்று பார்த்த போது கைவிடப்பட்ட முதியவர்களும் சிலர் முதியவர்கள் ஆதரவற்றும் இருக்கிறார்கள். சிலர் படுக்கையிலேயே இறந்துள்ளனர் என்றார்.

கொரோனா வைரஸ் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கே வருகிறது. அவ்வாறிருக்கையில் பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேற்பட்டோரே இறக்கின்றனர்.

எனவே முதியவர்களை பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பரவலாக எழுப்பப்படும் கோரிக்கையாகும். இது போல் முதியவர்களை பராமரிக்காமல் விடுவது மனிதநேயமற்ற செயலாகும் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.