இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக போரட்டம் !

50 2
50 2

பாலஸ்தீனிய நக்பா தினத்தின் 72ஆவது ஆண்டு நிறைவையொட்டி, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், ஐந்து பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.

அருகிலுள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்காக நகரத்திலிருந்து நிலங்களை பறிமுதல் செய்ய இஸ்ரேலிய அதிகாரிகள் எடுத்த முடிவுக்கு எதிராக, அல்-சாவியா மற்றும் காஃப்ர் கடூமில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இஸ்ரேலிய இராணுவம் அஸ்-சாவியா நகரில், பாலஸ்தீனியர்கள் நடத்திய போராட்டத்தை கலைப்பதற்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் வீசிய கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் இவர்கள் காயமடைந்தனர்.

கண்ணீர் புகை குண்டுகளால் பாதிக்கப்பட்ட ஐந்து எதிர்ப்பாளர்களுக்கு சிகிச்சை அளித்ததாக நகரத்தில் உள்ள பாலஸ்தீன மருத்துவ குழுக்கள் தெரிவித்துள்ளன.

அஸ்-சவியாவில் வசிப்பவர்கள் இந்த முடிவை எதிர்த்து இரண்டாவது வாரம் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தனர்.

சர்வதேச சட்டம், மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் இரண்டையும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களாகக் கருதுகிறது மற்றும் யூத குடியேற்றத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானது என்று கருதுகிறது.

பாலஸ்தீன வரலாற்றில் சியோனிச கும்பல்கள் 1948ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி வெளியேற்றப்பட்டதைக் குறிக்க பாலஸ்தீனியர்கள் ‘பேரழிவு’ என்று பொருள்படும் நக்பா என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.

இதேவேளை, நேற்று (வெள்ளிக்கிழமை), ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமுக்கு அருகிலுள்ள அபு டிஸ் என்ற கிராமத்தில் இராணுவத்தை தாக்க முயன்றதாகக் கூறப்பட்ட மூன்று பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலுக்கும், எகிப்து, சிரியா, ஜோர்தான், ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே கடந்த 1967ஆம் நடந்த 6 நாள் போரின் முடிவில், மேற்குக் கரை, பாலஸ்தீனம் உள்ளிட்டவற்றில் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது.

சர்வதேச நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகக் கருதப்படும் இந்தப் பகுதிகளில், யூத மதத்தைப் பின்பற்றும் தங்கள் நாட்டவர்களுக்கான குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்துள்ளது.

இந்த ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள சர்ச்சைக்குரிய யூதக் குடியிருப்புகள், சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என உலக நாடுகள் கூறி வந்தாலும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு அளித்து வருகின்றது.