அருவியில் இருந்து தவறி விழுந்து 11 யானைகள் பலி!

thailand
thailand

தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து பலியான யானைகளின் எண்ணிக்கை பதினொன்றாக அதிகரித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கோயாய் தேசிய பூங்காவில் அமைந்திருக்கும் ஹூ நரோக் நீர்வீழ்ச்சி மிகவும் அபாயகரமானது.

கடந்த வாரம் இந்த நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து விழுந்து ஆறு யானைகள் பலியாகின. தண்ணீரில் சிக்கி இரண்டு யானைகள் உயிருக்கு போராடி வந்தன. அந்த யானைகளுக்கு உதவ தாய்லாந்து வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நீர் வீழ்ச்சியில் இருந்து விழுந்து பலியான யானைகளின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்த போது மேலும் 5 யானைகளின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அதிகாரிகள், யானைகள் ஆற்றைக் கடக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

“யானைக்கூட்டத்தில் இருந்த குட்டி யானை நீரில் அடித்துச் சென்று நீர் வீழ்ச்சியில் சிக்கியிருக்கக்கூடும். அந்த குட்டி யானையை காப்பாற்ற மற்ற யானைகள் முயற்சித்த போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என அவர்கள் கூறியுள்ளனர்.

ஹூ நரோக் நீர்வீழ்ச்சியில் இருந்து யானைகள் விழுந்து இறப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 1992ம் ஆண்டு இதேபோல 8 யானைகள் அந்த நீர் வீழ்ச்சியில் இருந்து விழுந்து இறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.