துருக்கி-சிரிய பிரச்சினை; சிரியாவிற்குள் ஊடுருவும் துருக்கிய படைகள்

thurkey
thurkey

சிரியாவில் அமெரிக்க கூட்டணியான குர்திஷ் போராளிகளுக்கு எதிராக படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் துருக்கி, சிரிய எல்லையில் படைகளை குவித்து வருகிறது.

“துருக்கி பிரஜைகளுக்கு எதிராக நீண்ட காலமாக நீடித்து வரும் அச்சுறுத்தலை தணிப்பதற்கு” துருக்கி படையினர் விரைவில் எல்லையை கடக்கும் என்று துருக்கி ஜனாதிபதியின் தொடர்பாடல் பணிப்பாளர் பஹ்ரத்தீன் அல்துன் குறிப்பிட்டுள்ளார்.

”குர்திஷ் போராளிகள் ஒன்று எம்பக்க வர வேண்டும் இல்லையெனில் ஐ.எஸ் குழுவுக்கு எதிரான எமது நடவடிக்கைக்கு தடங்கலை ஏற்படுத்தும் அவர்களை நாம் நிறுத்துவோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

குர்திஷ் போராளிகளை நீக்கி சிரியாவில் பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன் துருக்கியில் தஞ்சமடைந்திருக்கும் 3.6 மில்லிய சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கவுள்ளது.

துருக்கி படை நடவடிக்கையை ஒட்டி அமெரிக்க துருப்புகள் குறித்த பகுதியில் இருந்து தமது படைகளை வாபஸ் பெற்றுக்கொண்டது. இது உள்நாட்டிலும் குர்திஷ் போராளிகள் இடையேயும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. எனினும் தனது முடிவை நியாயப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குர்திஷ்கள் கைவிடப்படவில்லை என்றும் அவர்களுக்கு சிறப்பு இடம் இருப்பதாகவும் தெரிவித்தார். சிரியாவில் இஸ்லாமி அரசுக் குழுவை வீழ்த்துவதில் குர்திஷ் போராளிகள் அமெரிக்காவின் முக்கிய கூட்டணியாக இருந்தனர்.

எனினும் இந்த குர்திஷ் போராளிகளை துருக்கி பயங்கரவாதிகளாக கருதுகிறது. இந்நிலையில் அமெரிக்கப் படை வாபஸ் பெறப்பட்டது துருக்கியின் தாக்குதலுக்கு வழிவிடுவதாக இருந்தது. டிரக்குகள், கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகள் துருக்கி எல்லை நகரான அக்காகவை நோக்கி செவ்வாய் இரவு முன்னேறியது. ஆட்களை ஏற்றிய பஸ் வண்டிகள் செல்வதை அரச செய்தி நிறுவனமான அனடொலி காட்டியது.

துருக்கி தனது சிரிய பக்கமான எல்லையில் 480 கிலோ மீற்றர் நீண்ட 32 கிலோ மீற்றர் தூரத்திற்கு பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைப்பதற்கே திட்டமிட்டுள்ளது. ஆரம்பக் கட்டமாக தால்அப்யாத் மற்றும் ராஸ்அல்ஐன் நகரங்களுக்கு இடையிலான எல்லையை இணைக்கும் 100 கிலோ மீற்றர் பகுதியையே துருக்கு ஊடுவும் என்று கூறப்படுகிறது.

இது அரபு மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளாகும். இதற்கு எதிராக குர்திஷ்களின் செயற்பாடு குறித்து உறுதி செய்யப்படவில்லை.

அமெரிக்க துருப்புகள் ஏற்கனவே நான்கு எல்லை நிலைகளில் இருந்து வாபஸ் பெற்றுள்ளபோதும் தொலைதூர கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து இன்னும் அந்தப் படை வாபஸ் பெறவில்லை.

எல்லை பகுதிகள் மனிதாபிமான பேரழிவு ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக குர்திஷ்கள் தலைமையிலான சிரிய ஜனநாயக படை எச்சரித்துள்ளது. ”இந்த தாக்குதலால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரத்தம் சிந்தப்படுவார்கள்” என்று சிரிய ஜனநாயகப் படையில் பொது கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவில் மூன்று நாட்களில் பொதுமக்கள் குவிப்புக்கு நாம் உத்தரவிட்டோம் என்று குர்திஷ் தலைமையிலான நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

தமது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு துருக்கியுடனான எல்லைக்கு வரும்படி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தோம் என்று அது கூறியுள்ளது.