ரஷிய அதிபர் புதின் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா?

Russian President Putin
Russian President Putin

ரஷிய அதிபர் புதின் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டதாக வெளியான தகவலை அதிபர் அலுவலகம் மறுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் ரஷியா கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாகவும் விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறி வருகிறது.

இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் கடந்த ஏப்ரல் மாதமே கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை ரஷிய அதிபர் அலுவலகம் மறுத்துள்ளது.

அதிபர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பத்திரிகையாளர்களை சந்தித்த போது புதின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு சோதனை தடுப்பூசி வழங்கப்பட்டதா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “இல்லை. இது ஒருபோதும் நடக்கவில்லை. கொரோனா தடுப்பூசி இன்னும் சான்றிதழ் பெறவில்லை. அது மருத்துவ பரிசோதனை மட்டத்திலேயே உள்ளது. தன்னார்வலர்கள் மட்டுமே தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதிபரோ அல்லது அவரது நிர்வாகத்தில் உள்ளவர்களோ தன்னார்வலர்களாக இருந்ததாக நான் கேள்விப்படவில்லை” – இவ்வாறு அவர் கூறினார்.