குர்திஷ்கள் மீதான தாக்குதல்- துருக்கி அதிபரை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

donald drump
donald drump

சிரியாவில் குர்திஷ்கள் மீது தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் முட்டாளாக இருக்காதீர்கள்

என துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனை டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிரியாவின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்திஷ் இன போராளிகளை குறிவைத்து துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா, சண்டையை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்தியது.

ஆனால் அதனை நிராகரித்த துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் சண்டையை நிறுத்தப்போவதில்லை என சூளுரைத்துள்ளார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் துருக்கிக்கு விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் சிரியா மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கிய முதல் நாளே (Oct.09) பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி தாயீப் எர்டோகனுக்கு ஜனாதிபதி டிரம்ப் கடிதம் அனுப்பியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் அந்த கடிதத்தின் நகலையும் வெள்ளை மாளிகை தனது அலுவலக இணைய பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அந்த கடிதத்தில் டிரம்ப் கூறியிருப்பதாவது:-

“ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்! ஆயிரக்கணக்கான மக்களை கொல்வதற்கு நீங்களும் பொறுப்பேற்க தேவையில்லை. துருக்கியின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு நானும் பொறுப்பேற்க தேவையில்லை.

நீங்கள் சரியான வழியில் செயல்பட்டாலும், மனிதாபிமான வழியில் நடந்தால் மட்டுமே உலகம் உங்களை சாதகமாக பார்க்கும். முட்டாளாக இருக்காதீர்கள். பேச்சுவார்த்தை மூலம் குர்திஷ் படையினருடனான பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிரம்பின் கோரிக்கையை தாயீப் எர்டோகன் முற்றிலுமாக நிராகரித்ததாகவும், அவர் எழுதிய கடிதத்தை குப்பை தொட்டியில் வீசியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே வெள்ளைமாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், “சண்டை நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு துருக்கி ஒத்துழைக்கவில்லையென்றால் அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையில் மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும்” என கடுமையாக எச்சரித்தார்.

குர்திஷ்கள் மற்றும் துருக்கி ராணுவத்திற்கிடையிலான சண்டையை நிறுத்த டொனால்ட் டிரம்ப் தீவிர முனைப்பு காட்டி வந்தாலும், அவர் சிரியாவில் இருந்து அமெரிக்க வீரர்களை திரும்பப்பெற்றதே துருக்கியின் தாக்குதலுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு தொடருகிறது.

இது தொடர்பாக டிரம்ப் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக அவரின் சொந்த கட்சியான குடியரசு கட்சியில் இருந்தே பெரும்பாலான விமர்சனங்கள் வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.