சமூக ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சட்டவரைபை நிறைவேற்றியது துருக்கி

Turkey tightens grip on social media
Turkey tightens grip on social media

துருக்கிய நாடாளுமன்றம் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் சட்ட வரைபொன்றை நிறைவேற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்களிடையே கருத்துச் சுதந்திரம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதிய சட்டம் இன்று (புதன்கிழமை) அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இந்த சட்டத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் ட்விற்றர் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் துருக்கியில் உள்ளூர் பிரதிநிதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இந்த சட்ட வரைபை ஆளும் AKP மற்றும் அதன் தேசிய பங்காளியான MHP ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டு சமர்ப்பித்த நிலையில் நேற்று முதல் இன்றுவரை இடம்பெற்ற விவாதங்களுக்குப் பின்னர் வரைபு நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், குறித்த நிறுவனங்கள் சில உள்ளடக்கங்களை அகற்றுவது அல்லது கடுமையான அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் ஒவ்வொருநாளும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாவனைகளை மேற்கொள்ளும் சமூக வலைப்பின்னல்களை குறிவைப்பதுடன், துருக்கிய பயனர்களின் தரவைக் கொண்ட சேவையகங்கள் துருக்கியிலேயே தரவுச் சேமிப்பை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளுக்கு நிறுவனங்கள் இணங்க மறுத்தால், அபராதம் மற்றும் அலைவரிசை கட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று குறித்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.