இளவரசர் வில்லியம் பயணித்த விமானம் திணறல்

uk 1
uk 1

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு விமானத்தில் புறப்பட்ட போது பலத்த புயல் காற்று வீசியதன் காரணமாக விமானம் தொடர்ந்து பயணிக்க முடியாமல் திணறியது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் ஆகிய இருவரும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வில்லியம்-கேத் தம்பதி லாகூரில் உள்ள புனித தலத்துக்கு சென்று, அங்குள்ள மதகுருக்களை சந்தித்து பேசினர். பின்னர் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் கிரிக்கெட் அகாடமிக்கு சென்றனர். அதனை தொடர்ந்து, இருவரும் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு விமானத்தில் புறப்பட்டனர்.

விமானம் இஸ்லாமாபாத்தை நெருங்கியபோது, பலத்த புயல் காற்று வீசியது. மேலும் மின்னல் வெட்டியது. இதன் காரமணமாக விமானம் தொடர்ந்து பயணிக்க முடியாமல் திணறியது. இதனால் விமானம் சுமார் ஒரு மணி நேரமாக வானில் வட்டமடித்தபடியே இருந்தது.

மோசமான வானிலைக்கு மத்தியில் விமானி 2 முறை விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து விமானம் மீண்டும் லாகூருக்கு திருப்பப்பட்டது. லாகூர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பிறகு, பத்திரிகையாளர்களிடம் பேசிய வில்லியம் தானும், மனைவி கேத்தும் நலமாக இருப்பதாக கூறினார்.