கலிபோர்னியாவில் காட்டுத் தீ !

514994
514994

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள அப்பில் தீ என அழைக்கப்படும் காட்டுத் தீ காரணமாக சுமார் 7 ஆயிரத்து 800 குடியிருப்பாளர்களை குறித்த பகுதியலிருந்து வெளியேறியுள்ளனர்.

கலிபோர்னியாவின் பியூமண்ட் நகருக்கு அருகிலுள்ள செர்ரி பள்ளத்தாக்கில் கடந்த வெள்ளிக்கிழமை பரவிய காட்டுத் தீ தற்போது 20,516 ஏக்கர் (8,302 ஹெக்டேர்) வரை பரவியுள்ளதாக சான் பெர்னாடினோ தேசிய வனப்பகுதி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அப்பில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்புப் பணியாளர்கள் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு கிழக்கே சுமார் 7,800 மக்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றி, காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

1,300 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர் கொட்டும் விமானங்களின் உதவியுடன், இந்த தீயை கட்டுப்படும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செங்குத்தான, கரடுமுரடான மலைப்பகுதிகளிலேயே இந்த காட்டுத் தீ ஏற்பட்டுள்ள காரணத்தினால் தீயணைப்பு இயந்திரங்களின் போக்குவரத்துக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த தீ பரவல் காரணமாக எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தீ விபத்தில் ஒரு வீடு மற்றும் இரண்டு வெளி கட்டடங்கள் அழிக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதேநேரம் வெப்பநிலை, மிகக் குறைந்த ஈரப்பதம் மற்றும் கடலோர காற்று காரணமாக இந்த வார இறுதியில் தீ விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.