இந்தியாவில் 40 இலட்சத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

5 2

இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இறுதி 10 இலட்சம் நோயாளர்கள், 13 தினங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில், 87 ஆயிரத்து 800 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 40 இலட்சத்து 20 ஆயிரத்து 112 ஆக உயர்வடைந்துள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றினால் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுவரும் 3 ஆவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

அமெரிக்கா, பிரேஸிலுக்கு அடுத்தபடியாக, சர்வதேச ரீதியில் இந்தியாவிலேயே 40 இலட்சத்திற்கும் அதிமானோருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 63 இலட்சத்து 86 ஆயிரத்து 483 ஆக உயர்வடைந்துள்ளது.

பிரேஸிலில் 40 இலட்சத்து 91 ஆயிரத்து 801 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தியாவில் 10 இலட்சம் கொவிட்-19 நோயாளர்கள் பதிவாகுவதற்கு 168 நாட்கள் என்ற நீண்ட காலம் எடுத்துள்ளது.

எனினும், 50 நாட்களுக்குள் இந்த எண்ணிக்கை 10 இலட்சத்திலிருந்து 40 இலட்சமாக அதிகரித்துள்ளது.

பிரேஸிலில், இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கு 75 நாட்களும், அமெரிக்காவில் 86 நாட்களும் எடுத்துள்ளன.

10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரையிலான நோயாளர்கள், அமெரிக்காவில் 43 நாட்களிலும், பிரேஸிலில் 27 நாட்களிலும், இந்தியாவில் 21 நாட்களிலும் பதிவாகியுள்ளனர்.

20 இலட்சம் முதல் 30 இலட்சம் வரையிலான நோயாளர்கள், அமெரிக்காவில் 27 நாட்களிலும், பிரேஸிலில் 23 நாட்களிலும், இந்தியாவில் 16 நாட்களிலும் பதிவாகியுள்ளனர்.

30 இலட்சம் முதல் 40 இலட்சம் நோயாளர்கள், அமெரிக்காவில் 16 நாட்களிலும், பிரேஸிலில் 25 நாட்களிலும், இந்தியாவில் 13 நாட்களிலும் பதிவாகியுள்ளனர்.

இதேநேரம், அமெரிக்காவில் 40 இலட்சம் முதல் 50 இலட்சம் நோயாளர்கள் 16 நாட்களிலும், 50 இலட்சம் முதல் 60 நோயாளர்கள் 22 நாட்களிலும் பதிவாகியுள்ளனர்.

இந்தியாவில் மரண எண்ணிக்கையானது, 69 ஆயிரத்து 655 ஆக உயர்வடைந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரு இலட்சத்து 92 ஆயிரத்து 32 பேரும், பிரேஸிலில் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 584 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேசரீதியில், 2 கோடியே 67 இலட்சத்து 72 ஆயிரத்து 143 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

8 இலட்சத்து 78 ஆயிரத்து 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு கோடியே, 88 இலட்சத்து 79 ஆயிரத்து 860 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன