‘மகா’ புயல் தீவிரமடைகிறது

maha
maha

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில், கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ‘மகா’ புயல் காரணமாக தென் மாவட்டங்களில் இரவு பகலாக மழை பெய்து வருகிறது.

23 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று நிருபர்களுக்கு கூறியதாவது:-

அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ‘மகா’ புயல் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி லட்சத்தீவுக்கு மேலே திருவனந்தபுரத்தில் இருந்து 380 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் மாலத்தீவில் இருந்து விலகி வடக்கு வடமேற்கு திசையில் செல்கிறது. இது அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

இந்த நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அரபிக்கடலின் உள்பகுதிக்கு புயல் செல்வதால், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும். குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை தற்போது இல்லை.

தமிழகத்தை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழையின் தாக்கம்தான் இருக்கும். மேகங்கள் திரண்டு வருவதைப் பொறுத்து மழை பொழியும். புயலின் தாக்கம் இருக்காது என தெரிவித்துள்ளார்.