ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்து மற்றுமொரு சிறுமி உயிரிழப்பு

hariyana
hariyana

ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று மாலை தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி ஷிவானி திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளார்.

பொலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்கும் பணியை தொடங்கினர்.

சிறுமிக்கு ஒக்சிஜன் கிடைக்கும் வகையில் ஆழ்துளை கிணற்றினுள் ஒக்சிஜன் செலுத்தப்பட்டு, குழந்தையின் உடல்நிலையை கேமரா மூலம் கண்காணித்தனர். சிறுமி தலைகீழாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்திருந்தாள்.

50 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே, பொக்லைன் எந்திரம் மூலம் சிறுமி இருக்கும் ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டது. பன்னர் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டப்பட்டு இன்று காலை 9.30 மணியளவில் சிறுமியை மீட்டனர்.

பின்னர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சுமார் 16 மணி நேரம் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சிறுமி, 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டும் குழந்தையை காப்பாற்ற முடியாததால் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆழ்துளை கிணற்றை மூடாமல் பெற்றோர் அலட்சியமாக இருந்ததால் சிறுமி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.