குளிர் காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் – ஹர்ஷவர்தன்!

குளிர்காலத்தில் கொரோனா வைரசின் வீரியம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகம் ஒன்றின் மூலம் நேற்று (11) உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ பண்டிகைகளை அனைவரும் வீடுகளுக்குள்ளேயே தங்களுக்கு அன்பானவர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்றும்; பண்டிகையின் பெயரால் வெளியே கண்காட்சிகள், பந்தல்கள் என்று யாரும் செல்லக்கூடாது என்றும் இப்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதுதான் அனைவரின் முதன்மையான தர்மமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்குமா என்ற கேள்விக்கு; தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகளில் உள்ளதால் அவற்றின் முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் ஒரு சுவாச வைரஸ். குளிர்கால நிலையில் இந்த வைரஸ்களின் பரவுதல் அதிகரிக்கும் என தெரிகிறது. குளிர்கால நிலை குறைந்த ஈரப்பதம் உள்ள சூழலில் சுவாச வைரஸ்கள் நல்ல வளர்ச்சியை பெறுகின்றன. எனவே மனதில் அனைவரும் கொள்ள வேண்டிய ஒரு அம்சம் உண்டு.

அது குளிர்காலத்தில் குடியிருப்புகளில் அதிகமாக கூட்டம் கூடுகிறபோது பரவல் அதிகரிக்கலாம் என்று கருதுவது தவறல்ல.

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக பெலுடா பரிசோதனை முறை எப்போது வரும் என்ற கேள்விக்கு; சி.எஸ்.ஐ.ஆரின் ஐ.ஜி.ஐ.பி. அமைப்பு உருவாக்கி உள்ள இந்த பரிசோதனையை வணிக அடிப்படையில் பயன்படுத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தனது அனுமதியை வழங்கி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.