ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 26 தலீபான்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும், காவற்துறையினரையும் குறிவைத்து தலீபான் அமைப்பு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தலீபான்களின் ஆதிக்கம் மிகுந்த ஹெல்மெண்ட் மாகாணத்தின் நஹர் இ சரஜ் மாவட்டத்தில் ராணுவம் அதிரடி வான் தாக்குதலை நடத்தியது. தலீபான் அமைப்பின் நிலைகள் மீது போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

இதில் தலீபான்கள் 26 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன் மேலும் பலர் படுகாயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.