கொரோனா தடுப்பூசி குறித்து பிரித்தானியா வெளியிட்ட தகவல்!

கொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மாத்திரமே பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் கேட் பிங்காம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வைரஸுக்கு எதிராக நோய்த்தடுப்பு திறன் கொண்ட எந்தவொரு தடுப்பூசியும் காய்ச்சல் தடுப்பூசியைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

சோதனையிலுள்ள கொரோனா தடுப்பூசி காய்ச்சல் தடுப்பூசியை விட சிறந்ததாக இருக்கும் என கருதக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா மோசமான வைரஸ் எனவும், இது மூக்கு, கண்கள் மற்றும் சுவாசக் குழாய் வழியாக செல்கிறது எனவும் பிரித்தானியா தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகளாவிய சோதனை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டாலும், ஜூலை வரை முகமூடிகள் மற்றும் சமூக இடைவெளி தேவைப்படலாம் என ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தடுப்பூசி குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.