பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா!

download 3 4
download 3 4

பிரான்ஸில் இரவுநேர காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ள நிலையில், நேற்றைய நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

நேற்று முன்தினம் அங்கு 22 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது.

இந்த நிலையில், நேற்றைய தினம் 30 ஆயிரத்து 621 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இது பாரிய அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பெரிஸ் உட்பட 9 நகரங்களில் நாளைமுதல், குறைந்தது 4 வாரங்களுக்கு இரவுநேர ஊரடங்கு அமுலாக்கப்படவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி எம்மானுவல் மக்ரோன் முன்னதாக அறிவித்திருந்தார்.

இதேநேரம், உயிர்களைக் காப்பாற்றுவதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் முற்றிலும் அவசியமாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்திற்கு எதிராக அரசாங்கங்கள் போராடும்போது, மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான பதிய நடவடிக்கைகளின் கீழ் வாழ வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

லண்டன் உள்ளிட்ட இங்கிலாந்தின் பிற பகுதிகள் அதிக எச்சரிக்கையின் கீழ் உள்ளமையினால், லண்டனில் நாளை முதல் உள்ளக ரீதியான சமூகமயமாக்கலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ப்ரான்ஸ், இத்தாலி, போலந்து மற்றும் ஜேர்மனி முதலான நாடுகளிலும் நாளாந்த கொவிட் தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 63 ஆயிரத்து 371 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 73 இலட்சத்து 70 ஆயிரத்து 468 ஆக உயர்வடைந்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 895 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன்படி, இந்தியாவில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் 70 ஆயிரத்து 338 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 64 இலட்சத்து 53 ஆயிரத்து 779 ஆக அதிகரித்துள்ளது.

8 இலட்சத்து 4 ஆயிரத்து 528 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.