தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ள பிரிட்டன் பிரதமர்!

0be6437 boris johnson afp 625x300 02 September 19
0be6437 boris johnson afp 625x300 02 September 19

பிரதமர் பதவியில் இருந்து தற்போது பெற்றுவரும் ஊதியத்தைக்கொண்டு குடும்பத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமான காரியமாக இருப்பதால், தனது பதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுவருகின்றன.

அந்நாட்டு ஊடகம் ஒன்றில், பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு எம்.பி-க்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சனின் ஊதியம் சுமார் 1,50,402 பவுண்டுகள். இது போரிஸ் ஜான்சன் பிரதமராவதற்கு முன்னர் பத்திரிகையாளராக இருந்தபோது வாங்கிய ஊதியத்தைவிடக் குறைவு என்று கூறப்படுகிறது.

பிரதமராவதற்கு முன்னர், அந்நாட்டு நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதும் பணியிலிருந்த போரிஸ் ஜான்சன், மாத வருமானமாக 23,000 பவுண்டுகள் பெற்றுவந்திருக்கிறார்.

டோரி கட்சியின் தலைவராவதற்கு முன்பு எம்.பி-யாக இருந்த போரிஸ் ஜான்சன், சுமார் 2,75,000 பவுண்டுகள் ஆண்டு வருமானமாகப் பெற்றுவந்திருக்கிறார். இதுதவிர, மாதத்துக்கு இரண்டு மேடைப்பேச்சுகள் என 1,60,000 பவுண்டுகள் பெற்றுவந்தார்.

இதைக்கொண்டு மதிப்பிடுகையில், தற்போது போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பெற்றுவரும் ஊதியம் மிகவும் குறைவு என பிரிட்டன் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அவர் பதவி விலகுவதற்கான முக்கிய காரணமாக அவரது குடும்பச் சூழலே கூறப்படுகிறது. போரிஸ் ஜான்சனுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். அவர்களில் சிலர், பதின் பருவத்தை எட்டியிருப்பதால், அவர்களுக்கான வருங்காலச் செலவுகளை மேற்கொள்ளவும், விவாகரத்தான தனது முன்னாள் மனைவி மரீனா வீலருக்கு விவாகரத்து விதிமுறைகளின்படி மாதந்தோறும் குறப்பிட்ட தொகையை அனுப்ப வேண்டும் என்பதாலும் அதற்கு இந்த ஊதியம் போதாது என்று கூறப்படுகிறது. இதனால், அடுத்த ஆண்டு மே மாதமளவில் பிரதமர் பதவியிலிருந்து விலக போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.