புலியின் நண்பனான ஆடு உயிரிழப்பு!

russia
russia

ரஷ்யாவின் உயிரியல் பூங்காவில் ‘அமுர்’ என்ற பெயர் கொண்ட சைபீரிய புலியுடன் நட்பாக காணப்பட்ட ‘தைமுர்’ எனப்படும் ஆடு உடல்நலக்குறைவினால் மரணித்துவிட்டது.

கடந்த 2015ம் ஆண்டு இந்த புலிக்கு உணவாக ஆடு ஒன்றை பூங்கா ஊழியர்கள் கூண்டுக்குள் அனுப்பி வைத்த வேளையில் அந்த ஆட்டை கடித்து குதறி சாப்பிடுவதற்கு பதிலாக அதன் மீது அன்பு மழை பொழிந்து ஆடும், புலியும் நட்பாக பழகின.

இதைப் பார்த்து, ஆச்சரியமடைந்த பூங்கா ஊழியர்கள் அந்த ஆட்டை புலியுடன் தொடர்ந்து பழகவிட்டனர். அந்த ஆட்டுக்கு ‘தைமுர்’ என பெயரிட்டு பூங்கா ஊழியர்கள் அழைத்து வந்தனர்.

ஆட்டுக்கு புலி மேல் சுத்தமாக பயம் இல்லாமல் போனதால் அடிக்கடி வம்பிழுத்து விளையாடி சண்டை போட்டது. புலி இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் விளையாடி வந்தது.

ஆனால் 2016ம் ஆண்டு ஜனவரியில் ஆடு தன்னிடம் வம்பிழுத்து விளையாடியபோது பொறுமையை இழந்த புலி திடீரென ஆட்டை வாயில் கவ்வி தூக்கி வீசியது. இதனால் ஆட்டுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, பூங்கா ஊழியர்கள் ஆட்டையும் புலியையும் தனியாக பிரித்து வைத்து பாரமரித்து வந்தனர். அத்துடன் ஆட்டை தலைநகர் மொஸ்கோவிற்கு அனுப்பி வைத்து, சிறப்பு சிகிச்சை அளித்தனர். ஆனாலும் புலி தாக்கிய பாதிப்பில் இருந்து மீளாத ஆடு, தொடர்ந்து அந்த பூங்காவில் வாழ்ந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 5ம் திகதி உடல் நலக்குறைவால் தைமுர் ஆடு மரணித்து விட்டது.

இதனால் ரஷ்ய மக்கள் பலரும் தைமுர் ஆட்டுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.