5 மாடி கட்டிடத்தை 62 மீற்றர் தூரத்திற்கு நகர்த்தி சாதனை!

சீனாவில் இயந்திர கால்கள் மூலம் 5 மாடி கட்டிடமொன்று அண்மையில் 62 மீற்றர் தூரத்திற்கு நகர்த்தப்பட்டு சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் குஅங்பு மாவட்டத்தில் 1935 ஆம் ஆண்டு 5 மாடிகளை கொண்ட பாலர் பாடசாலையொன்று கட்டப்பட்டது.

85 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்ட குறித்த கட்டிடம் அம்மாகாண அரசால் பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் கலாச்சார கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டிடம் 7,600 தொன் எடை கொண்ட ’T’ வடிவிலான அமைப்பாகும்.இந்நிலையில், குறித்த கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் புதிதாக வணிகவளாகம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் நிறைந்த கட்டிடமாக விளங்கிய அந்த பாடசாலைக் கட்டடத்தை இடிக்கும் சூழ்நிலை உருவானது.

இதனால், கட்டிடத்தை இடிக்காமல் அதை அப்படியே 21 பாகை கோணத்தில் 62 மீற்றர் (203 அடி) தூரத்திற்கு நகர்த்தி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.

அந்தவகையில் கட்டடத்தின் அத்திவார தூண்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு கட்டிடத்துடன் இயந்திர கால்கள் பொருத்தப்பட்டன. அதன் பின் ’T’ வடிவிலான அந்த கட்டடத்தை திட்டமிட்டபடி 62 மீற்றர் தூரத்திற்கு நகர்த்தும் பணி 18 நாட்களாக நடைபெற்றது.

இதையடுத்து, குறித்த கட்டடம் எந்தவித பாதிப்புமின்றி வெற்றிகரமாக வெறு இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இச் சவாலான பணியை மேற்கொண்ட ஷாங்காய் இவலுயேசன் நிறுவனத்தின் பொறியியல் துறையினருக்கும் பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.