நாயுடன் விளையாடும்போது ஜோ பைடனின் வலது கால் முறிந்தது!

f2fcca38 image 1 png

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், தனது நாயுடன் விளையாடும்போது எதிர்பாராத விதமாக வலது காலை முறித்துக் கொண்டுள்ளார்.

அதனால் அவருக்கு பல வாரங்களுக்கு நடைப்பயிற்சி அவசியம் என்றும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

பைடன் சனிக்கிழமையன்று உபாதைக்குள்ளானதாகவும் பரிசோதனைக்காக டெலாவேரின் நெவார்க்கில் உள்ள எலும்பியல் நிபுணரை சந்தித்ததாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆரம்ப பரிசோதனைகளில் அவரது காலில் வெளிப்படையான எலும்பு முறிவைக் காட்டவில்ல‍ை. எனினும் வைத்திய ஊழியர்கள் மேலும் விரிவான சிடி ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பைடனின் வலது காலின் நடுவில் இரு சிறிய எலும்புகளின் சிறு எலும்பு முறிவுகள் காணப்பட்டுள்ளதாக அவரது வைத்தியர் கெவின் ஓ’கானர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் அவருக்கு பல வாரங்களுக்கு நடைபயிற்சி தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஓ’கானர் கூறினார்.

78 வயதில் அவர் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். பிரசாரத்தின் போது அவர் தனது வயது குறித்த கேள்விகளை அடிக்கடி நிராகரித்தும் வந்தார்.

பைடன் ஞாயிற்றுக்கிழமை வைத்தியரின் அலுவலகத்திற்குள் நுழைவதைக் காண ஊடகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்ல‍ை. எனினும் சி.டி. ஸ்கானுக்காக ஒரு இமேஜிங் மையத்திற்குச் செல்ல வைத்தியரின் அலுவலகத்தை விட்டு வெளியேறிய அவர், ஊன்றுகோல் அல்லது பிற உதவி இல்லாமல் நடந்தாலும், நடையில் தடுமாற்றம் இருந்ததாக கூறப்படுகிறது.