ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வன்முறை!

18 f
18 f

ஹாங்காங் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு போலிசார் முற்பட்டபோது நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது.

கவுலூன் மாவட்டத்தில் உள்ள ஹாங்காங் பலதுறைதொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். சிலர் கவணைப் பயன்படுத்தித் தாக்கினர். மேலும் சிலர் வளாகத்திற்கு வெளியே மரங்களுக்கு தீவைத்தனர்.

செங்கற்கள், தீ குண்டுகள், வில் மற்றும் அம்புகள் போன்ற மேம்பட்ட ஆயுதங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்தினர்.

அவர்களை அங்கிருந்து விரட்ட போலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

முன்னதாக ஆர்ப்பாட்டங்களின் போது பயன்படுத்தப்பட்ட செங்கற்கள், குப்பைகளைச் சாதாரண உடையில் வந்த சீன ராணுவ வீரர்கள் சுத்தம் செய்தனர்.

அவர்களுடன் ஹாங்காங் தீயணைப்பு வீரர்களும் போலிசாரும் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுப் பணிகளை மேற்கொள்ள ஹாங்காங் அரசு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், தாமாக முன்வந்து அந்தப் பணிகளை மேற்கொண்டதாகவும் சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் சீன ராணுவத்தின் வருகை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் மூண்ட புதிய வன்முறையால், மாணவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து பள்ளிகளும் இன்றும் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைப்பு அறிவித்தது.

சாலைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கினாலும், தற்போது நிச்சயமற்ற நிலை நிலவுவதாக என்று கல்வி அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் பங்கேற்கக்கூடாது என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆர்ப்பாட்டங்களின் காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக சீர்த்திருத்தங்களை வலியுறுத்தி ஹாங்காங் மக்கள் கடந்த ஐந்துமாத காலமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.