விந்தணுக்களில் எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது கஞ்சா?

32
32

மனித உடல் முழுவதும் காணப்படும் ஏற்பிகளின் சிக்கலான வலைபின்னல் எண்டோகன்னபினாய்ட் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.

இந்த அமைப்பு, மூளை, நாளமில்லா சுரப்பி திசு மற்றும் நோய் தடுப்பு அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நிகழவும், அதை ஒழுங்கு செய்யவும் உதவுகிறது.

ஆண், பெண் ஆகிய இருபாலினரின் இனப்பெருக்க உறுப்புகளில் காணப்படும் இவ்வமைப்பு இயக்குநீர் எனப்படும் ஹார்மோன்கள் மற்றும் மனித இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

மரிஜுவானா அல்லது டெட்ராஹைட்ரோ கன்னபினால் எனப்படும் கஞ்சாவில் 400-க்கும் மேற்பட்ட வேதிப்பொருள்கள் காணப்படுகின்றன.

ஆனால் அவற்றில் 80 வேதிப்பொருள்கள் கன்னபிஸ் எனப்படும் கஞ்சா பயிரில் மட்டும் காணப்படும் தனித்துவமானவை.

இவையே கன்னபினாய்ட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.

மரிஜுவானா, உடல் இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு எண்டோகன்னபினாய்ட் அமைப்பை சார்ந்த ஏற்பிகளின்மேல் செயல்படுகிறது.

மரிஜுவானா மனித தகவல் தொடர்பு செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, உடலின் பல இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டின் சமநிலையில் சீர்குலைவை ஏற்படுத்துகிறது.

விந்தணு உற்பத்தி மற்றும் கருத்தரித்தலிலும் இது பாதிப்பை உண்டு பண்ணுகிறது. அதிகப்படியான கஞ்சா பயன்பாடு டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் ஹார்மோனை குறைத்து, ஆண்குறி விறைப்பு தன்மையை பாதிக்கும்.

மேலும் விந்தணுவில் நச்சுத்தன்மையை உருவாக்கி, அதை தரமிழக்கச் செய்யும். மரிஜுவானாவுடன் மது, புகையிலை மற்றும் காப்ஃபைன் போன்றவற்றை பயன்படுத்துவது அல்லது நொறுக்கு தீனி உண்பது போன்ற ஆரோக்கியமற்ற வாழ்வியல் முறையை கடைப்பிடிப்பது தாக்கத்தின் அளவு அதிகமாகும்.

2019 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது சிறு ஆய்வு என்றாலும் அதன் முடிவுகள் ஆச்சரியமூட்டுவதாக உள்ளன. ஏதாவது ஒரு காலகட்டத்தில் கஞ்சா புகைத்தவர்களின் விந்தணு எண்ணிக்கை (அடர்த்தி), புகைக்காதவர்களை காட்டிலும் அதிகமாக உள்ளது என்று அது கூறுகிறது. பாலியல் செயல்பாட்டில், குறிப்பாக பெண்களுக்கு முன்னேற்றம் காணப்பட்டதாகவும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.

கஞ்சாவிலுள்ள வேதிப்பொருள்கள் விந்தணுவின் நீந்தும் திறனை பாதிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

செல்லின் ஆற்றல் மையம் மைட்டோகாண்டிரியா ஆகும். விந்தணுவின் மைட்டோகாண்டிரியாவுடன் கஞ்சா இணையும் போது, இயல்பை காட்டிலும் வேகமாக நீந்தும்படி தூண்டுகிறது. ஆகவே, விரைவிலேயே விந்தணுக்கள் சோர்ந்து போகின்றன.

கரு முட்டையை அடைவதற்கு ஏறக்குறைய 6 அங்குல நீள பாதையை விந்தணுக்கள் நீந்தி கடக்க வேண்டும். ஓரங்குலத்தில் ஆயிரத்தில் ஒரு மடங்கு அளவான விந்தணுக்களின் வேகத்தை இது தூண்டுவதால் விரைவில் ஆற்றலை இழந்து முழு தூரத்தையும் கடக்க இயலாமல் போகிறது.

கஞ்சா புகைப்பவர்களின் விந்தணுவில் மியூட்டேஷன் என்னும் பிறழ்வு செயல்பாடு நடைபெற வாய்ப்பிருப்பதாகவும், பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கஞ்சா புகைப்பவர்களின் மோசமான வாழ்க்கை முறை அல்லது பயன்படுத்தும் கஞ்சா இவற்றுள் எது விந்தணுவின் அடர்த்தி அல்லது ஆண்மைக்கான டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனை பாதித்து கருவுறுதலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று இன்னும் அறிவியல்பூர்வமாக கண்டறியப்படவில்லை.

இது குறித்து சரியான முடிவுகளை சம்மந்தப்பட்டவர்களே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.