பத்து தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள டிஜே!

Teejay Arunasalam
Teejay Arunasalam

சிம்பு என்ற நடிகரின் மாற்றம் தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருவதை அனைவரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

அதற்கு காரணம் சிம்புவின் முன்னாள் நடவடிக்கைகள் தான். சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவதில்லை, தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தது. தற்போது அதை எல்லாம் தாண்டி வருகின்ற பொங்கலுக்கு ஈஸ்வரன் படத்தை கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இது பிரபல கன்னட படமான மப்டி படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிம்புவுடன் சேர்ந்து பிரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்த படமும் பல பஞ்சாயத்துகளை சந்தித்து தற்போதுதான் ஒரு விடிவு காலம் பெற்றுள்ளது. இந்நிலையில் தனுஷுடன் அசுரன் படத்தில் அவருக்கு மகனாக நடித்த டிஜே என்ற பாடகர் பத்து தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

சிம்புவின் சினிமா கேரியரில் பத்து தல படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என இப்போதே கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. அந்த அளவுக்கு சிம்புவுக்கு மிரட்டலான கதாபாத்திரமாம்.