41 வருட சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக ஹீரோவாகவும் செந்தில்!

senthil
senthil

தமிழ் சினிமாவில் காமெடியனாக நாற்பத்தி ஒரு வருடமாக வலம் வந்து கொண்டிருக்கும் செந்திலுக்கு இப்போது தான் கடவுள் கண்ணை திறந்திருக்கிறார் போல. முதல் முறையாக ஹீரோவாக நடிக்க உள்ளார்.

அந்த காலத்தில் இருந்தே கவுண்டமணி செந்தில் காமெடி என்றால் சிரிக்காத ஆட்களே கிடையாது. பெரும்பாலும் கவுண்டமணியிடம் அடிவாங்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே செந்தில் நடித்திருப்பார்.

கவுண்டமணி அளவுக்கு செந்தில் தனியாக பல படங்களில் ஜொலிக்க முடியவில்லை என்பதும் வருத்தம்தான். இருந்தாலும் இன்றும் ரசிகர்களிடையே கவுண்டமணி செந்தில் ஜோடி என்றால் ஒரு விதமான வரவேற்பு இருந்து வருகிறது.

ஒரு சில இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமா மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடிக்கும் செந்தில் முதல் முறையாக ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இந்த படத்தை விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா என்பவர் இயக்க உள்ளாராம்.

மேலும் இந்த படத்தில் செந்திலுக்கு ஆயுள் தண்டனை கைதி வேடம் எனவும் இவருக்கு ஜோடி யாரும் இல்லை எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் செந்தில் கடந்த 2007ஆம் ஆண்டே ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வர வேண்டியது.

ஆதிவாசியும் அதிசய பேசியும் என்ற வித்தியாசமான கதைக்களத்தில் ஒரு படம் உருவாகியது. ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படம் பாதியில் கைவிடப்பட்டது. ஆதிவாசியும் அதிசய பேசியும் படத்தில் செந்திலுக்கு ஜோடியாக மீனா நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் விலகிக் கொண்டார் என்பதும் கூடுதல் தகவல்.