இணையவழி நடைபெறவுள்ள பேராசிரியர் நந்தியின் சிறுகதைகள்!

image 1
image 1

ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக சமூதாய மருத்துவத்துறை பேராசிரியராகவும் கடமையாற்றிய வாழ்நாள் பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அவர்களின் 93வது பிறந்த தின நினைவேந்தல் நிகழ்வு இணையவழி மார்ச் 30 , 31 மற்றும் ஏப்ரல் 1ம் திகதிகளில் இரவு 7.00 – 9.00 மணி வரை சூம் செயலிவழி நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணப்பல்கலைக்க மருத்துவபீடத்தை உருவாக்கிய முன்னொடிகளிலிலொருவரான பேராசிரியர் நந்தி தனது மருத்துவத்துறை அனுபவங்களோடு தமிழ் இலக்கியத்துறையில் தனக்கான தனித்துவமான இடத்தைப்பதிவு செய்தவர். மருத்துவ இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள், ஆன்மீகம், சிறுவர், நாடக இலக்கியமென்று பல துறைகளில் தனது மகத்தான பங்களிப்பை ஈழத்து இலக்கியத்துறைக்கு வழங்கியுள்ளார்.

எளியமுறையில் மருத்துவத்தகவல்களை மக்களிடம் கொண்டுசேர்த்த பெருமை பேராசிரியர் நந்தியைச் சாரும். இவரது மருத்துவ இலக்கியமான அருமைத்தங்கைக்கு, அன்புள்ள நந்தினி போன்றன மருத்துவ அறிவுரை நூல்கள் எளிமையான இலகுதமிழில் மருத்துவ அறிவை பாமரருக்கு கொண்டுசேர்த்தவர்.

‘இதயநோயும் தடுப்பு முறைகளும்’ என்ற மருத்துவநூலும் இதற்கு சிறந்த உதாரணமாகும். இதே போன்று உங்களைப்பற்றி, சுட்டிகளுக்குப் பாட்டுக்கள், தம்பி தங்கைக்கு போன்ற சிறுவர் நூல்களையும் எழுதியுள்ளார். குரங்குகள் என்ற நாடக நூலும் வெளிவந்துள்ளது. மலைக்கொழுந்து ,தங்கச்சியம்மா ஆகிய நாவல்களையும் இவர் எழுதியுள்ளார். தனக்கேயுரிய தனித்துவமான விபரிப்புப்பாணியையும் கதைசொல்லும் முறையையும், கொண்டுள்ளார். இலகுவாக அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய எழுத்துநடையையும், அருமையான கதைக்களங்களையும், கருக்களையும் கொண்டு இவரது படைப்புக்கள் தனித்துவமாகத் துலங்குகின்றன.

பேராசிரியர் நந்தி ஐம்பது சிறுகதைகளை எழுதியுள்ளார். ‘ஆசையின் ஓசை’ என்ற இவரது முதலாவது சிறுகதை 1960ம் ஆண்டு பத்திரிகை ஒன்றில் பிரசுரமாகியிருக்கிறது. தொடர்ச்சியாக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்துறையில் தடம்பதித்தவர் பேராசிரியர் நந்தி, பேரறிஞர் ராஜாஜி அவர்கள் நந்தி என்ற புனைபெயரை இவருக்கு சூட்டினார். பின்னாளில் நந்தி என்றபெயர் தமிழ் இலக்கியத்துறையில் தனித்துவமான அடையாளமாக நிலைத்துவிட்டது.

‘நந்தியின் சிறுகதைகள்’ என்ற நூல் அவரது சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. 2005ம் தனது இறப்புவரை இலக்கியத்துறையிலும் யாழப்பாணப்பல்கலைக்கழக மருத்துவத்துறையிலும் அயராது பணியாற்றியவர். இவரது நினைவாக இணையவழி சிறுகதை வாசிப்பு நிகழ்வு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. 12 சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன. இதில் இலங்கையின் பிரபலமான வானொலி அறிவிப்பாளர்களும் நாடகர்களும், கல்வியாளர்களும் சிறுகதைகளை வாசிக்கிறார்கள். முதல் நாள் நிகழ்வை கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் ஆரம்பித்துவைக்கிறார்.

சத்தியகுமார்(யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) ,கஸ்ரோ ராகுல் , தே.ஜனனீ (யாழ்ப்பாண பல்கலைக்கழகம்), கே. ஜமுனாமலர் (சுவிஸ் இலக்கியவாதி), கே. கிருத்திகா , வி. துவாரதி ,பாலா பாலேஸ்,சர்வேஸ்வரா (யாழ்ப்பாண பல்கலைக்கழகம்), க.இ.கமலநாதன் (தேசிய கல்வியல் கல்லூரி), மனோரஞ்சினி (ஆசிரியர்), தேவநாயகம் தேவானந்த் (நாடகர்) ,சீமா சாமுவல் (இலக்கியவாதி,இந்தியா) ஆகியோர் பல்வேறு தேசங்களிலிருந்து ஆற்றுகை செய்கிறார்கள். இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்வில் சூம் 2666873933 வழியாக இணைந்து கொள்ளலாம்.