பொதுபுத்தியும் நேர்மையும்: தி பெமிலி மேன் 2 தொடர்பான விரிவான அலசல்

44444
44444

சில கேள்விகளுடன் இந்த அலசல் கட்டுரையைத் தொடங்குவோம். தமிழகத்தில் வசிக்கும் நமக்கு இலங்கை – ஈழப் பிரச்னை பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? விடுதலைப்புலிகள் பற்றி நாம் அறிந்த விவரங்கள் என்னென்ன? உண்மையில் விடுதலைப்புலிகள் பற்றி நமக்குள் இருக்கும் பிம்பம் மட்டுமே நிஜமா? ‘அவர்கள் போராளிகள்தான்; தீவிரவாதிகள் இல்லை’ என்கிற வாதம் சரியா? ஈழ விடுதலைக்காக விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தியதும், அந்த ஆயுதங்கள் வாங்குவதற்காக சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக சொல்லப்படுவதும் உண்மையா?

இந்தக் கேள்விகள் எல்லாமே ‘ஆம்’, ‘இல்லை’ என்கிற ஒற்றை பதிலில் அடங்கிவிடாது. தமிழகத்தில் இருக்கும் நமக்கு மிகவும் நெருக்கமான அல்லது நெருக்கமாக ஆக்கப்பட்ட ஈழப் பிரச்னை எப்போதுமே உணர்வுகளின் வெளிப்பாடாக மட்டுமே இருந்து வருகிறது. இலங்கையில் நடந்த போர்களும், அதன்காரணமாக அகதிகளாக உலகமெங்கும் தங்கள் கூட்டிலிருந்து வலுக்கட்டாயமாக பிய்த்து எறியப்படும் மனிதர்களும் நம்மை அந்த உணர்ச்சிக்குள் தள்ளுகின்றனர். நம் காதுகளுக்கு எட்டும் செய்திகள் எல்லாம் ஈழத் தமிழரை எண்ணி கண்ணீர் விடக்கூடியவையாகவே இருக்கின்றன. எல்லாவற்றையும் மீறி, ஈழம் என்பது நமக்கு ஒரு பெரும் அரசியல். ஓட்டு வங்கி. இந்த சிந்தனைகள் யாவையும் மனதில் ஏற்றி வைத்துக்கொண்டு நாம், ‘தி பெமிலி மேன்’ வெப் சீரீஸின் இரண்டாம் சீசனை அலசுவோம் வாருங்கள்.

இந்தத் தொடரின் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி அடைந்ததுக்கு மிக முக்கிய காரணம், அதன் திரைக்கதையில் இருந்த சமநிலைதான். இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி எத்தனையோ படங்கள், தொடர்கள் வந்தாலும் கூட, ‘தி பெமிலி மேன்’ அளவிற்கு அந்த தீவிரவாதத்தின் இரண்டு பக்கங்களையும் அலசிய திரைக்கதை இல்லையென்றே சொல்லலாம். உண்மையில் தீவிரவாதிகளாக இருக்கும் இஸ்லாமியர்களுக்கும், எல்லா இஸ்லாமியர்களுமே தீவிரவாதிகள்தான் என்கிற எண்ணத்தை நமக்குள் விதைக்கும் சக்திகளுக்கும் இடையிலான ஒரு கோட்டினை அற்புதமாக காட்டிய தொடர் இது. இதற்கிடையில் இந்த தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் ஒரு அரசு ஏஜெண்டின் சொந்த வாழ்க்கை கதையும் சேர்ந்ததுதான் இந்தத் தொடரின் சிறப்பு. இவையாவும் மிகச் சரியான முறையில் எழுதப்பட்ட ஒரு தொடர் இது.

உண்மையில் தீவிரவாதிகள் டெல்லியை நாசப்படுத்த எடுத்த முயற்சி வெற்றிபெற்றதா? இல்லை தோல்வியுற்றதா /என்பதை நமது முடிவுக்கே விட்டிருப்பார்கள். அது நல்லவர்களுக்கு சாதகமாகவே முடிந்தது. முதல் சீசனின் அந்த தொடர்ச்சி இரண்டாவதில் இடம்பெற்றிருப்பது நல்ல திரைக்கதைக்கான வலுவான ஆதாரம் எனலாம். சிறப்பு தீவிரவாத தடுப்பு அதிகாரியாக இருந்த ஸ்ரீநாத் திவாரி தனது குடும்பத்தோடு நேரம் செலவிடாதாலேயே வீட்டிற்குள் நிறைய பிரச்னைகள் வருகிறது என்பதால், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார்.

அதேநேரத்தில், ஈழத்தில் பிரச்னைகள் பெரிதாகின்றன. ஈழப் பிரதமர், அவரது ஆலோசகர் மற்றும் பிரதமரின் தம்பி மூவரும் ஒரு தாக்குதலில் இருந்து தப்பி வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். பிரதமரின் தம்பி சுப்பு தமிழ்நாட்டில் தஞ்சம் அடைகிறார். இலங்கை அரசு அதை அறிந்து, தங்களிடம் சுப்புவை ஒப்படைக்கச் சொல்லி கேட்க, அதன் பின்னணியில் இருக்கும் பல்வேறு அரசியல் காரணங்கள் அங்கே வெளிப்படுகிறது. கதை தொடங்கும் இடம் இதுதான். இனி இந்த தொடரின் ப்ளஸ், மைனஸ்களை பார்க்கலாம் வாருங்கள்

ப்ளஸ் என்னென்ன?

சமரசம் செய்யப்படாத திரைக்கதைக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம். வழக்கமாக வடநாட்டு அதிகாரிகள் தமிழ்நாடு வந்தால் தமிழர்கள் எல்லாரும் அவர்களுக்கு வசதியாக இந்தி பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், இந்தத் தொடரில் அது எங்கும் மீறப்படவில்லை. எல்லா கதாபாத்திரங்களும் தங்களுக்கு என்ன மொழி தெரியுமோ அந்த மொழியையே பேசுகிறார்கள். “என்னய்யா இந்த ஊர்ல இந்தியே பேசமாட்டாங்களா?” என்கிற ஒரு வடநாட்டவரின் கேள்விக்கு, “நாம நம்ம ஊர்ல இந்தி பேசுறதாலேயே உலகம் முழுக்க அதை பேசுவாங்கனு எதிர்பார்த்தா யார் முட்டாள்?” என்று முக்கிய கதாபாத்திரமே பதில் கூறுவது இதுவரை இந்திய அளவில் எடுக்கப்பட்ட எந்த திரைப் படைப்பிலும் பதிவு செய்யப்படாதது.

அதேபோல் ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரமும் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எளிதில் அதை திரைக்கதையில் கொண்டுவர இயலாது. ஆனால், இந்த தொடரில் அது அற்புதமாக நிகழ்ந்திருக்கிறது. இரண்டு வேறுபட்ட கலாசாரங்கள் கொண்ட மனிதர்கள் ஒரு அறையில் இருக்கும்போது எழும் குழப்பங்களும், அவற்றை நகைச்சுவையோடு அணுகுவதும் இந்தத் தொடரில் இயல்பாக நிகழ்ந்துள்ளது. அதற்கும் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

கதாபாத்திர தேர்வுகள் மிகவும் முக்கியமான விஷயம். மனோஜ் பாஜ்பாய் முதல் சீசனை போலவே இதிலும் தனது முத்திரையை ஆழமாக பதித்திருக்கிறார். இந்த சீசனில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த பாத்திரத்திற்கான இறுக்கமும், உழைப்பும் தொடர் முழுக்க அவர் கண்களில் தெரிகிறது. ஷரீப் ஹாஸ்மி, ப்ரியாமணி ஆகியோர் முதல் சீசனைப்போலவே இதிலும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் போக இரண்டாவது சீசனில் முத்துபாண்டியனாக வரும் ரவீந்திர விஜய் மற்றும் தேவதர்ஷினி இருவரும் அட்டகாசமான நடிப்பை தந்திருக்கிறார்கள். நடிகர்களின் இந்தப் பங்களிப்பு, இந்தத் தொடரின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிப்பதை நாம் காணும்போதே உணரலாம்.

இந்தத் தொடரின் வசனங்கள் தனித்துவமானவை. காரணம், இதற்கு முன்பு எந்த தொடரிலும் பேசியிராத, இந்தியாவிற்குள்ளேயே இருக்கும் பல பரிமாணங்களை வெளிக்கொணரும்படியான வசனங்கள் அவை. “எனக்கு தென்னிந்தியா உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும்” என்று ஒருவர் கூற, “தென்னிந்தியா என்றால் எதை சொல்கிறீர்கள்? இங்கே தென்னிந்தியாவில் ஐந்து மாநிலங்கள் இருக்கின்றன” என்று ஒருவர் பதில் கூறுவது போன்ற வசனங்கள் எல்லாம் இதற்கு முன்பு யாரும் உரையாடாத விஷயம். இப்படி தொடர் முழுக்கவே மேற்கோள் கட்டும்படியான பல வசனங்கள் இருப்பதை நீங்கள் காணும்போது உணரலாம்.

குறிப்பாய் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகள் வளரும் விதமும், அவர்களுக்கும், முந்தைய தலைமுறைக்குமான இடைவெளி எப்படிப்பட்டது என்பதை விளக்கும் ஒரு காட்சி உண்டு. காணாமல் போன தன் மகளை பற்றி அவள் படிக்கும் பள்ளியில் சென்று அவன் விசாரிக்கையில், ஆவலுடன் படிக்கும் சக மாணவர்கள் பேசும் ஒவ்வொரு வசனமும் நம் சமூகத்தில் இதுவரை பதிவுசெய்யப்படாத ஒன்று. இணையம் ஆக்கிரமித்திருக்கும் இந்த சூழலில் அது எந்தளவு மாணவ சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாக அந்த காட்சியை கூறலாம்.

இலங்கை – ஈழ பிரச்னையை கையாண்ட விதம் உண்மையிலேயே இந்தத் தொடரில் மெச்சத்தக்கது. முக்கிய கதாபாத்திரங்கள் வடநாடடில் இருந்து வருவதால், அவர்களுக்கு ஈழப் பிரச்னை எளிதில் புரியாது. ஈழப் போராளிகள் என்கிற வார்த்தை பதமே அவர்களுக்கு காஷ்மீர் போராளிகள் என்னும் பெயரிலான தீவிரவாதிகளைத்தான் நினைவுக்கு கொணரும். ஈழ இயக்கமோ அல்லது இஸ்லாமிய இயக்கமோ அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட மனிதர்கள் என்கிற எண்ணமே பரவலாக இவர்களுக்கு உண்டு. ஆனால் இது அப்படிப்பட்டதல்ல என்பதை உணர்த்தும் அட்டகாசமான காட்சி ஒன்று இந்தத் தொடரில் உண்டு. சமந்தா என்கிற ராஜி பாத்திரம் வழியாக அதை மிகச்சரியாக பதிவு செய்திருக்கின்றனர். இதன் காரணமாகவே இந்தத் தொடர் மிக முக்கியமான இடத்தை எட்டுகிறது. அதுமட்டுமின்றி, இதுவரை ஈழப் போராட்டம் பற்றி பெரிய யோசனையோ கருத்தோ இல்லாத வடநாட்டவர்களுக்கு இந்தத் தொடர் ஒரு கண்திறப்பாக இருக்கும் என்பதிலும் ஐயமில்லை. குறைந்தபட்சம் இந்த வழியிலாவது அவர்கள் ஈழப் போராட்டத்தை புரிந்துகொண்டால் நலமே.

சரி இந்தத் தொடரின் மைனஸ் – பிரச்னைகள் என்னென்ன?

கதைப்படி ஈழப் போராட்டம் நடக்கும் காலகட்டத்தை மாற்றி இருக்கிறார்கள். அதில் எதுவும் பிரச்னை இல்லை. திரைக்கதையின் வசதிக்காக அதை மாற்றியதில் தவறேதுமில்லை. ஆனால் ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவர், தனது சொந்த பிரச்னைகளுக்காக, இயக்கத்தை விட்டு வெளியேறி, ஓர் அந்நிய நாட்டு உளவு அமைப்போடு கைகோத்து, இன்னொரு தேசத்தின் பிரதமரை கொல்ல முயற்சி செய்வதாக காட்டியிருப்பதில்தான் பிரச்னை இருக்கிறது. ஏனெனில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது ஏற்கெனவே இங்கே எதிர் விமர்சனங்கள் அநேகம் உண்டு. அதுமட்டுமின்றி அவர்கள் தீவிரவாத அமைப்பு என்று கூறி உலகின் பல நாடுகளும் அதற்கு தடைவிதித்ததே அதன் காரணமாகத்தான். இப்படி இருக்கையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இயக்கத்தில் பயிற்சி பெற்ற போராளிகளை ஒரு முன்னாள் தலைவர் பயன்படுத்திக்கொள்வதைப் போன்ற காட்சி நிச்சயம் தவிர்த்திருக்கப்படவேண்டிய ஒன்றே. அதேபோல் இந்த ஒற்றை மனிதனின் மொத்த எண்ணங்களுக்கு எதிராக ஈழ அரசாங்கம் அமைதியையே விரும்புகிறது என்பதை காட்சிப்படுத்தி இருந்தாலும் கூட, இப்படி இயக்க போராளிகளை ஒற்றை மனிதன் தனது சுய லாபத்துக்கு பயன்படுத்த முடியும் என்பதையும் அழுத்தமாக சொல்ல முற்பட்டது கண்டிப்பாக ஈழப் போராளிகளுக்கு எதிரான அம்சமாகவே முடியும்.

இந்தத் தொடரின் வெகுசில இடங்களில் இந்திய மக்களின் பொதுப்புத்தியில் இருக்கும் சில எண்ணங்களை அப்படியே வசனங்களாக உலாவவிட்டது ஏன் என்று புரியவில்லை. சென்னை என்றாலே வெயில் அதிகமாக இருக்கும் என்பதும், ஐந்து வருடத்திற்கு முன்பாக வெள்ளம் வந்த இடத்தில் இப்போது குடிநீர் பஞ்சம் இருக்கிறது என்றும் சொல்லப்படும் வசனங்களை கவனிக்கவேண்டும். உண்மையில் மும்பையில் வருடா வருடம் வெள்ளம் வரும். ஆனால் அங்கும் அதே குடிநீர் பிரச்னை உண்டு. கோடைக்கால டெல்லியும், மும்பையும் நம்மை வெயிலின் உச்சத்திற்கே அழைத்துச்செல்லும். அங்கிருந்து வரும் ஒருவன் “சென்னை என்றாலே இப்படித்தான்” என்கிற தொனியில் வசனம் பேசுவது முறையானதில்லை.

ராஜி என்கிற ஈழப்போராளிதான் கதையின் சரிபாகத்தை தாங்குகிறார். ஆனால் அவருக்கு ஏன் மேக்கப் என்கிற பெயரில் கருப்பு சாயம் பூசியிருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இது தமிழர்கள் என்றாலே நிறம் கம்மியானவர்கள் என்கிற மனநிலையின் வெளிப்பாடாக இருந்தால் அது மிக மிக மோசமான விஷயமே என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இல்லை, அந்தக் கதாபாத்திரம் மாநிறத்திற்கும் சற்று குறைவானது என்பதை காட்ட முயற்சித்திருந்தால் அதற்கேற்றவாறு நடிகரை தேர்ந்தெடுத்திருக்கலாம். அதுவும் செய்யப்படவில்லை. சற்றே கூர்ந்து யோசிக்கவேண்டிய விஷயமாக இதை சொல்லலாம். அதேபோல், ராஜி பேருந்தில் சந்திக்கும் இளைஞன், அவள் பணிபுரியும் இடத்தில் இருக்கும் மேனேஜர், செக்போஸ்ட் ஒன்றில் இவளை கவனிக்கும் அதிகாரி என அவள் எதிர்கொள்ளும் தமிழ் ஆண்கள் எல்லாருமே செக்ஸ் அடிக்ட்டாக இருப்பதன் பின்னணியும் புரியவில்லை. வேறு வழிகளே இல்லையா என்ன அந்த கதாபாத்திரத்தை காண்பிக்க?

சர்வதேச தளத்தில் வெளியிடப்படும் ஒரு தொடரில் இதுபோன்ற சின்ன சின்ன பிரச்னைகள் நிச்சயமாக கவனத்தில் வைத்திருக்கவேண்டிய ஒன்றே. அதுவும் இதுபோன்று தீவிர அரசியல் பேசும் தொடர்கள், அதுவும் விறுவிறுப்பான திரைக்கதைகளை துணைக்கு கொண்டிருக்கும் தொடர்களில் இன்னும் ஆழ்ந்த பார்வை வெளிப்படவேண்டும் என்பதும் முக்கியமான ஒன்று. அப்படி இல்லாது போனால் இந்தத் தொடருக்கு பின்னால் இருக்கும் மொத்த உழைப்பும் வீணாக போய்விடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆயினும், ‘தி பெமிலி மேன்’ என்கிற இந்தத் தொடர், தான் எடுத்துக்கொண்ட களத்திற்கு தன்னால் இயன்றளவு நேர்மையாக இயங்கியிருக்கிறது என்பதே உண்மை. உண்மைக்கு மிக நெருக்கமான அந்தக் காட்சிப்படுத்தல் மிக முக்கியமான ஒரு கூறாக இங்கு இருக்கிறது. நல்ல நடிகர்கள், தெளிவான, வேகமான திரைக்கதை, யார் எதிரி யார் நண்பன் என்பதன் பின்னால் இருக்கும் அந்த முரண்பாடுகளை கையாண்ட விதம் என பல கோணங்களில் அணுகக்கூடிய ஒரு நல்ல அனுபவத்தை இது தருகிறது.

பால கணேசன்

நன்றி : புதிய தலைமுறை