உண்மையைப் படம் பிடித்த சூர்யா, ஜோதிகா.. நெகிழ்ந்து போன ஷைலஜா!

samayam tamil
samayam tamil

ஜெய்பீம் படக் குழுவினருக்கு முன்னாள் கேரள அமைச்சர் கே.கே. ஷைலஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் படம் மனித சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் சாதிய அமைப்பின் மீதான பெரும் தாக்குதல். உண்மையை படம் பிடித்த சூர்யா, ஜோதிகாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று கேரள மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர் பாராட்டியுள்ளார்.

ஜெய்பீம் படத்தைப் பாராட்டாதவர்களே இல்லை. படம் பார்த்த அனைவருமே இதுபோன்ற படம்தான் சமூகத்துக்கு தேவை. வக்கீல்கள் எப்படி இருக்க வேண்டும், காவல்துறையிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். நேர்மையானவர்கள் இணைந்தால் எத்தனை நல்லது நடக்கும் என்றெல்லாம் பலரும் இப்படம் குறித்து பாராட்டி வருகின்றனர்.

ஜெய் பீம் இந்த நிலையில் கேரள மாநில முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவும் இப்படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். கொரோனோவுக்கு எதிரான போரில் நாட்டிலேயே முன்னோடியாக திகழ்ந்தது கேரள மாநிலம்தான். அதிலும் ஷைலஜா டீச்சரின் துரிதமான, செயல்பாடுகள் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. அப்படிப்பட்ட ஷைலஜா, ஜெய்பீம் படம் பார்த்து அதை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து நீண்டதொரு பதிவை அவர் தனது முகநூலில் போட்டுள்ளார். ஷைலஜாவின் பாராட்டின் மொழியாக்கம்:

நமது நாட்டில் இன்னும் நிலவி வரும் ஜாதிக் கொடுமைகளையும், அரசியல் சட்ட துஷ்பிரயோகத்தையும் முகத்தில் அறைந்தார் போல சுட்டிக் காட்டியுள்ளது ஜெய் பீம். ஆதிக்க வெறி பிடித்தவர்கள், தங்களை விட பலம் குறைந்தவர்களை ஒடுக்கி ஆள நினைக்கும் புத்தி உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள காவல்துறை அடக்குமுறையைப் பார்க்கும்போது, ஒருவரின் மனதில் கொஞ்சம் கூட ஈவு இரக்கமோ, மனிதாபிமானோ, அனுதாபமோ இல்லாவிட்டால் அவர்கள் எந்த அளவுக்கும் துணிவார்கள் என்பதையே காட்டுகிறது.

ஜெய்பீம் படத்தில் வருவது போன்ற காவல்துறை அத்துமீறல்கள், மரணங்கள், ஜெயில் விதி மீறல்கள் அவசர நிலை காலத்தின்போது அதிகம் நடந்தன. சமூகத்தில் உச்ச நிலையை அடைய முடியாமல் இன்னும் கூட விளிம்பு நிலை மக்கள் போராடிக் கொண்டுதான் உள்ளனர். அம்பேத்கர் கொடுத்த அரசியல் சாசனம் சமத்துவத்தை போதித்தாலும் ஆளும் வர்க்கத்தினர் இன்னும் கூட அதற்கு எதிராகத்தான் நடந்து கொள்கின்றனர்.

வழக்கறிஞராக இருந்தபோது முன்னாள் நீதிபதி சந்துரு நடத்திய சட்டப் போராட்டத்தையும், ஏழைகளுக்காக அவர் வாதிட்ட வழக்கையும் மிகவும் தத்ரூபமாக படமாக்கியுள்ளார் இயக்குநர் ஞானவேல். வழக்கறிஞர் சந்துருவாக நடிகர் சூர்யா மிகவும் இயல்பாகவும், சிறப்பாகவும் நடித்துள்ளார். ஒரு வழக்கறிஞரின் சட்டப் போராட்டத்தை கண் முன்கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.

ஜெய் பீம் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் லிஜிமோள் தான். செங்கேனி வேடத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். அவருக்கு எந்த விருது கொடுத்தாலும் அது போதாது. அத்தனை தத்ரூபமாக நடித்துள்ளார். படத்தின் தரத்தை இந்த சக்தி வாய்ந்த பெண்ணின் பாத்திரம்தான் உயர்த்திப் பிடிக்கிறது. ராஜாக்கண்ணு வேடத்தில் நடித்துள்ள நடிகர் மணிகண்டன் இன்னும் எனது மனதில் நிற்கிறார். மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ள அந்த காவல்துறை அதிகாரி உள்ளிட்ட அனைவருமே அற்புதமாக செய்துள்ளனர்.

மார்க்ஸ் மூலமாகத்தான் நான் அம்பேத்கரை படித்தேன் என்று நீதிபதி சந்துரு கூறியுள்ளது. இந்த நாட்டின் பெருமையை உணர்த்துகிறது. உண்மையில் அனைவரின் பெருமையாகவும் உயர்ந்துள்ளார் நீதிபதி சந்துரு. இப்படி ஒரு மனிதாபிமான, மனிதநேயத்துடன் கூடிய, மனசாட்சியை உலுக்கக் கூடிய நல்லதொரு படத்தைக் கொடுத்த, உண்மையைப் படம் பிடித்த சூர்யா, ஜோதிகாவுக்கு எனது பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார் ஷைலஜா.