‘ஜெய் பீம்’ பட சர்ச்சை: சூர்யாவிற்கு ஆதரவுக்கரம் நீட்டும் இயக்குனர் பா. ரஞ்சித்!

download 1 6
download 1 6

’ஜெய்பீம்’ படம் விவகாரம் தொடர்பாக “விஸ்ராண்ட்சூர்யா” என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வரும் நிலையில் இதே ஹேஷ்டேக்கை பதிவு செய்து இயக்குனர் பா ரஞ்சித் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே வேளையில் இந்தப்படத்தை சுற்றி வட்டமிடும் சர்ச்சைகளும் ஓய்ந்தபாடாக இல்லை. தமிழ் சினிமாவில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ள இந்த விவகாரத்தில் சூர்யாவிற்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்தப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘ஜெய் பீம்’ படம் தொடர்பாக பாமக கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளித்த சூர்யா, படத்தில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற வாசகத்தை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம். சிறந்த படைப்பை பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவை தாக்கினாலோ, எட்டி உதைத்தாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி நேற்றைய தினம் பேட்டியளித்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் சூர்யாவிற்கு ஆதரவாக பலர் “விஸ்ராண்ட்சூர்யா” என்ற ஹேஷ்டேக்கில் பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர்.

சூர்யாவை தாக்குவோம் என பகிரங்கமாக சிலர் பேட்டியளித்தும் கூட திரையுலகினர் எவரும் இதைப்பற்றி கருத்து தெரிவிக்கவில்லை என பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவின் புகைப்படத்தை பகிர்ந்து “விஸ்ராண்ட்சூர்யா” என பதிவிட்டுள்ளார்.